பாம்பு கடித்து இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை சாலை இல்லாததால் 10 கி.மீ தொலைவுக்கு நடந்து சுமந்து சென்ற பெற்றோரின் நிலை வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள அன்புமணி இந்த அவலம் இன்னொரு முறை தமிழ்நாட்டில் நடைபெறக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
பாம்பு கடித்து பச்சிளம் குழந்தை பலி
பாம்பு கடித்த பச்சிளம் குழந்தையை சாலை வசதி இல்லாததால் நடந்தே தூக்கி சென்ற நிலையில் அந்த குழந்தை உயிர் இழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே அக்குழந்தை இறந்து விட்டது.
உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
10 கி.மீ குழந்தையை தூக்கி சென்ற அவலம்
அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து என்னால் இன்னும் மீண்டு வர இயலவில்லை. ஒதிஷாவிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மட்டுமே கேள்விப்பட்ட அவலம் தமிழ்நாட்டிலும் நிகழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதி கிராமங்களுக்கு பெரும்பாலும் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டன. அத்திமரத்துக் கொல்லை என்பது மலைக்கிராமம் என்பதால் தான் சாலை அமைக்கப்படவில்லை என்ற காரணத்திற்குள் நுழைந்து தப்பிவிட நாம் முயலக்கூடாது. அத்திமரத்துக் கொல்லை கிராமத்திலிருந்து சாலை அமைப்பது சாத்தியம் தான்; இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அங்கு சாலை அமைக்கப்படவில்லை என்பது அரசு நிர்வாகம் தலைகுனிய வேண்டிய அவலம் தான்.
சாலை வசதி இல்லாத மலை கிராமங்கள்
அத்திமரத்துக் கொல்லை போன்று சாலை வசதி இல்லாத கிராமங்கள் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன. விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் சாலை வசதி இல்லை என்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மலைப்பகுதிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் கூடுதல் நிதியும், மானியமும் ஒதுக்கப்படும் நிலையில், அதைப் பயன்படுத்தி சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி நடக்கக்கூடாது.
6 மாதங்களுக்குள் செயல்படுத்திடுக
அதிவிரைவுச் சாலைகளும், எட்டுவழிச் சாலைகளும் அதிக அளவில் அமைக்கப்பட்டு வரும் சூழலில், மலைக்கிராமங்களுக்கு சாலையே இல்லை என்பது வெட்கப்பட வேண்டிய வளர்ச்சி இடைவெளி ஆகும். அனைத்து மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி வலியுறுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அமைச்சர் மனோ தங்கராஜை கைது செய்து சிறையில் அடைங்க..! பாஜக திடீர் போர்கொடி... என்ன காரணம் தெரியுமா?