கோவையில் இளைஞர் ரகு மரணம்.. ஓபிஎஸ்-இபிஎஸ் மீது வழக்கு போடணும்..!

Asianet News Tamil  
Published : Nov 26, 2017, 03:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
கோவையில் இளைஞர் ரகு மரணம்.. ஓபிஎஸ்-இபிஎஸ் மீது வழக்கு போடணும்..!

சுருக்கம்

anbumani emphasis file case on ops and eps for youth dead in kovai

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, அரசு விழாவாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 3-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. அதற்காக  நேற்று முன் தினம்(24-ம் தேதி) கோவையில் பேனர்களும் அலங்கார வளைவுகளும் அமைக்கும் பணி நடைபெற்றது.

கோவை விமான நிலையத்திலிருந்து வ.உ.சி மைதானம் வரை கோவை-அவிநாசி சாலையில் சாலையை மறித்து அலங்கார வளைவுகளும் பேனர்களும் அமைக்கும் பணி நேற்று மாலை நடைபெற்றது. கோவை-அவிநாசி சாலையில், இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது.

இதையடுத்து நேற்று முன் தினம் இரவு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரகு, சாலையை ஆக்கிரமித்திருந்த அலங்கார வளைவில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

ரங்கசாமி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ரகு, அமெரிக்காவில் பணிபுரிந்துவந்துள்ளார். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ரகு, சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் இறப்பை அடுத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கோவை மாநகராட்சி அதிகாரிகள், அலங்கார வளைவுகளையும் பேனர்களையும் அகற்றினர்.

ரகுவின் மரணம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவால் மக்களுக்கு ஏற்படும் அவதிகள் கொஞ்சநஞ்சமல்ல. கோவையில் அலங்கார வளைவில் மோது பொறியாளர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அதற்கு முன்பே கடந்த 30.08.2017 அன்று வண்டலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் சரிந்து விழுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர். இதுவரை விழா நடைபெற்ற அனைத்து நகரங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் கட்டாயப்படுத்தி விழாவுக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வரும் 29-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறவுள்ள விழாவுக்காக அங்குள்ள மன்னர் சரபோஜி கல்லூரியின் திடல் சிதைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம் என்பதன் பொருள் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு என்பது தான். ஆனால், மக்களைக் கொல்வதற்கும், கொடுமைப்படுத்துவதற்கும் தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும். அதற்கு முன் பொறியாளர் ரகுவின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 304 - ஆவது பிரிவின்படியும், சாலைகளைத் தோண்டி சேதப்படுத்தியதற்காக தமிழ்நாடு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் மற்றும் இழப்பு ஏற்படுத்துவதை தடுப்பதற்கான சட்டத்தின்படியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்..!
'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?