
தமிழக அரசை தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்களில் விமர்சித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று டுவிட்டரில் விமர்த்தும் கிண்டலடித்தும் டுவீட்களை போட்டுள்ளார்.
தமிழக அரசின் 846 ஆம்புலன்ஸ்களில் 250 பழுதாக உள்ளது என்ற செய்தியை பதிவிட்டு அதை விமர்சிக்கும் வகையில், தமிழகத்தில் அரசாங்கமே பழுதாகி முடங்கித்தான் கிடக்கிறது.. என்ன செய்வது சாபக்கேடு என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
2022-ம் ஆண்டுக்குள் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும் என்ற பிரதமரின் கருத்தை பதிவிட்டு, தயவு செய்து ஊட்டச்சத்திற்கான பொருளை தமிழக அரசுக்கு பிரதமர் விளக்க வேண்டும். இல்லையெனில் ஊட்டச்சத்தை பெருக்குவதாகக் கூறி 2000 டாஸ்மாக் கடைகளை தமிழகத்தில் பினாமி அரசு திறந்துவிடும் என கிண்டலடித்துள்ளார்.
தமிழகத்தில் மதுவிலக்கு கோரி நீண்ட காலமாக பாமக நிறுவனர் ராமதாஸ் போராடிவருகிறார். உச்சநீதிமன்றத்தில் பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில்தான், நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள மதுக்கடைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், படிப்படியாக மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்துவதாக கூறிய தற்போதைய தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு போராடி, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்துவருகிறது.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான பெண்களின் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், டாஸ்மாக் கடைகளை திறப்பதிலேயே தமிழக அரசின் முழு கவனமும் இருக்கிறது.
அதை விமர்சிக்கும் வகையிலேயே பாமக நிறுவனர் ராமதாஸ் அந்த டுவீட்களை போட்டுள்ளார்.