
கமல் ஒரு பூரண அரசியல்வாதியாகி விட்டதற்கான ஆதாரம் வாட்ஸ் ஆப்பில் வைரலாகிக் கொண்டிருக்கிறது என்று கிண்டலாக கண் சிமிட்டுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அந்த வாட்ஸ் ஆப் பதிவை பிளே செய்து பார்த்தால், ரசிகர் ஒருவருக்கு ‘பொளேர்’ வைக்கிறார் கமல்! அம்மாடியோவ்!...
கர்நாடக மாநிலத்தில் நடந்த சம்பவம் போல் இருக்கிறது அது. கமல் உடன் ரமேஷ் அரவிந்த் இருப்பதும், பாதுகாப்புக்கு வரும் போலீஸாரின் சீருடையும் அப்படி சொல்கின்றன.
ஒரு சிறிய வணிக நிறுவனத்தின் முதல் மாடியிலிருந்து வெளியே வருகிறார் கமல். சிவப்பு நிற அரைகை டீ ஷர்ட், வெளிர் ஊதா ஜீன்ஸில் கும்மென்று இருக்கிறார் மனிதர். மழுங்க ஷேவ் செய்த ‘பிக் பாஸ்’ முகம் மற்றும் ஹேர் ஸ்டைல் ஆகியன இந்த சம்பவம் தற்சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோதான் என்பதை உரக்க சொல்கின்றன.
அவரை காண வணிக வளாகத்தின் முன் பெரும் கூட்டம் கூடியிருக்கிறது. கமல் வெளியே வரும் அவரது நண்பரான விக் வைத்த ரமேஷ் அரவிந்த் வந்து கூட்டத்தை அமைதியாக இருக்க செய்கிறார். இந்த நேரத்தில் கமல் வெளியே வர துவங்க, ஊதா கலர் சட்டை போட்ட ஒரு இளைஞர் மட்டும் படிக்கட்டுகளில் ஏறி கமலை நோக்கி ஓடுகிறார். ஆனால் அவரை வழிமறித்து ரமேஷ் அரவிந்த் கீழே இழுத்து தள்ளுகிறார். இந்த நேரத்தில் படிக்கட்டுக்கு வரும் கமல் எல்லோரையும் பார்த்து வணங்குகிறார்.
இந்த நேரத்தில் செக்யூரிட்டி நபர் கமலிடம் கைகுலுக்க ஆளாய் பறக்க ‘டூட்டிய பார்க்க வேண்டிய நீயே இப்படி பண்ணினா எப்படி?’ என்பது போல் கமல் டென்ஷனாகி நின்று அவரை பார்த்து ஏதோ சொல்கிறார். செக்யூரிட்டி திரும்பி கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்குள் அவரை தாண்டி வரும் அந்த ஊதா சட்டை இளைஞர் மறுபடியும் கமலின் கால் நோக்கி குனிந்தவாறு அவரிடம் கை குலுக்க முயல்கிறார். முதலில் அவரது முதுகில் கைவைத்து அழுத்தும் கமல், அவர் நிமிரும் நொடியில் டென்ஷனாகும் கமல் அலட்டிக் கொள்ளாமல் அந்த இளைஞரின் முகத்தில் கைவைத்து பின் நோக்கி ஒரு தள்ளு தள்ளிவிட்டு காரை நோக்கி நகர்ந்து சென்றுவிடுகிறார். மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தபடியே அவரை நோக்கி ஓடுகிறது. இதுதான் அந்த ஷாக் பதிவு.
இந்த வீடியோவை அப்லோடி, ரசிகனை பொளேர்! என அறைந்திருக்கிறார் கமல் என்று கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்.
அரசியலுக்குள் வரும் கமலை நோக்கி இதை வைத்துத்தான் கலாய்க்கிறார்கள் விமர்சகர்கள். அவர்கள் “அன்பு மிகுதியால் தன்னை நாடி வரும் ரசிகனிடம் முரட்டுத்தனம் காட்டியிருப்பதன் மூலம் கமலுக்கு அரசியல்வாதி ஆவதற்கான பூரண தகுதி வந்துவிட்டது.
ரசிகன், தொண்டனை அடிப்பதில் கில்லாடி விஜயகாந்த்தான். ஸ்டாலினும் இதற்கு விதிவிலக்கில்லை. அந்த வகையில் கமலும் இப்போது இந்த வரிசையில் சேர்ந்ததன் மூலம் அவர் அம்சமான அரசியல்வாதியாகிவிட்டார்.” என்கிறார்கள்.
அதே நேரத்தில் கமலை நன்கு அறிந்த அவரது நட்பு வட்டாரமோ வேறு சில விஷயங்களை சொல்கிறார்கள். அதாவது “கமல் இப்போது மட்டுமில்லை பல சமயங்களில் இப்படி நடந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு கூட அவரது ஆழ்வார்பேட்டை வீட்டின் முன் வந்து நின்று அவரை சந்திக்க ரசிகர்கள் சிலர் அனுமதி கேட்டனர். செக்யூரிட்டி ‘அவர் பிஸியா இருக்கார் . இன்னைக்கு முடியாது.’ என்று சொல்ல, ரசிகரில் ஒருவர் அவரை இப்போ பார்க்க முடியலேன்னா இந்த இடத்திலேயே தீ குளிப்பேன். என்று மீண்டும் மீண்டும் சொல்லி ஆவேசப்பட்டிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் வீட்டில் இருந்த மண் எண்ணெய் கேனுடன் வெளியே வந்த கமல் அவரது கையில் அதை கொடுத்து ‘ஊத்தி தீ குளிடா பார்க்கலாம்! எனக்கும் வேலை இருக்கு உனக்கும் வேலை இருக்குது. அதை பார்ப்போமே! என்னை நேர்ல பார்த்து உனக்கு என்ன ஆவ போகுது?போயி ஆளாளுக்கு வேலைய பார்ப்போமே!’ என்றபடி மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டார்.
அந்த ரசிகருக்கு அதிர்ச்சியை விட ஆச்சரியமே அதிகம். காரணம் என் தலைவனை பார்த்துவிட்டேன், அவர் என்னிடம சில நிமிஷங்கள் நின்று நேரடியாக பேசிவிட்டார், ரொம்ப சந்தோஷம், அவரே கொளுத்திக்க சொன்னால் தீ குளிக்கவும் ரெடி’ என்று குதூகலித்திருக்கிறார்.
கமல் என்றுமே தன்னை வைத்து ரசிகர்கள் நேரத்தையும், வேலையையும் வீணடிப்பதை விரும்பமாட்டார். இப்போது வாட்ஸ் ஆப்பில் வரும் சம்பவத்தில் கூட அவர் ரசிகனை அடிக்கவில்லை, தடையை மீறி தன்னிடம் ஆவேசமாக வரும் ரசிகனை அவரும் பாதுகாப்பு கருதி ஆவேசமாக தள்ளியிருக்கிறார் அவ்வளவே! தமிழக அரசாங்கத்தின் கண்ணிலும், அ.தி.மு.க.வின் மனசாட்சிக்குள்ளும் விரலை விட்டு ஆட்டும் அவருக்கு பாதுகாப்பு முக்கியமில்லையா?” என்கிறார்கள்.
ஹும் என்னவோ போங்க பிக் பாஸ்!