
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மட்டுமின்றி சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த ஓராண்டாக காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, திமுக சார்பில் ஏற்கனவே ஆர்.கே.நகர் வேட்பாளராக போட்டியிட்ட மருது கணேஷ் இந்தமுறையும் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டவுடன், திமுக சார்பில், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
இந்நிலையில், விடுதலைப் புலி அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மட்டுமின்றி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் திமுகவுடன் தான் கூட்டணி என திட்டவட்டமாக தெரிவித்தார்.