ஓபிஎஸ்சை நம்பி இருட்டில் கூட கையை பிடித்தப்படி செல்லமுடியும். பழனிசாமியுடன் செல்ல முடியுமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் டிடிவி தினகரன்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகவும், பின்னர் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. தொடர்ந்து பின்னடைவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வந்தார். திருச்சியில் ஓபிஎஸ் நடத்திய மாநாடும் பெரிதாக எடுபடவில்லை. இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரின் இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “உண்மையான அதிமுக தொண்டர்கள் கையில் கட்சியை ஒப்படைப்பதே நோக்கம். அதிமுகவை மீட்க பன்னீசெல்வமும் நானும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம். அதிமுகவின் அனைத்து அடிப்படை தொண்டர்களும் இணையவேண்டும் என்பதே நோக்கம். எங்களுக்குள் எந்த பகையும் இல்லை சில காரணங்களுக்காக பிரிந்து இருந்தோம். இரண்டு இயக்கமும் ஒன்று சேர முடிவு செய்துள்ளோம்.
இது நீண்ட காலமாகவே யோசிக்கப்பட்டு வந்தது. கட்சியை காப்பாற்றவே இந்த முடிவை எடுத்துள்ளோம். பணமூட்டைகள் உள்ளவர்களிடம் தேவை கருதி சிலர் செல்கின்றனர். ஈபிஎஸ் துரோகி எனில் திமுக எங்களுக்கு பொது எதிரி. சிலர் சுயநலத்திற்காகவே ஈபிஎஸ் பக்கம் செல்கின்றனர். எங்களால் யாரையும் பணம் கொடுத்து வாங்க முடியாது. ஓபிஎஸ்சை நம்பி இருட்டில் கூட கையை பிடித்தப்படி செல்லமுடியும். பழனிசாமியுடன் செல்ல முடியுமா ? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை மீட்டு ஜெயலலிதா தொண்டர்களிடம் ஒப்படைக்க இருவரும் இணைந்து செயல்பட முடிவு. ஆணவத்துடன், அரக்கர்கள் போல செயல்படும் நபர்களிடமிருந்து அதிமுகவை மீட்கவுள்ளோம்” என்று பேசினார். இதனை அடுத்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “ஓபிஎஸ் & டிடிவி தினகரன் இனிமேல் இணைந்து செயல்படுவார்கள். இலக்கினை அடைய டிடிவி தினகரன், ஓபிஎஸ் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
கடந்த காலத்தை பற்றி எதையும் பேச விரும்பவில்லை. கடந்த காலத்தை பற்றி பேசினால் பிளவுகளும், பேதங்களும்தான் வரும். அதிமுகவின் எதிர்காலம் கருதி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்காலத்தை பற்றியே திட்டமிடுகிறோம். சமூக விரோத கும்பலிடமிருந்து அதிமுகவை மீட்பதே இரு கட்சிகளின் நோக்கம்” என்று கூறினார்.
இதையும் படிங்க..கடைசி 3 அஸ்திரங்கள்! டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பில் அவரும் இருந்தாரு.! அடேங்கப்பா.! என்ன நடந்தது?