அண்ணா அறிவாலயமே....? அம்மா உணவகத்தை மூடலாமா..? ரைம்மிங்காக போட்டு தாக்கிய அண்ணாமலை...

By manimegalai aFirst Published Nov 2, 2021, 7:22 PM IST
Highlights

ஏழைகள் பசி பிணி போக்கும் அம்மா உணவகத்தை மூடலாமா என்று தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை: ஏழைகள் பசி பிணி போக்கும் அம்மா உணவகத்தை மூடலாமா என்று தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

அது 2013ம் ஆண்டு… தமிழகத்தில் அப்போதும் உணவின்றி பசியால் வாடும் மக்கள் இருந்தார்கள். நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் திண்டாடியவர்கள் பலர்.

அப்படிப்பட்டவர்களின் நிலை கண்டு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா. நகரில், கிராமப்புறங்களில் என எங்கும் மக்கள் பசியுடன் உறங்க கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட திடடம் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 3 வேளையும் சூடான சுவையான உணவு அளிக்கப்படுகிறது. அதாவது மலிவு விலையில்…! மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களால் அம்மா உணவகங்கள் நிர்வகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொடக்கத்தில் இந்த திட்டத்தை பற்றி விமர்சிக்காத கட்சிகளே இல்லை. மக்களை முன்னேற விடாமல் சோம்பேறிகளாக்கும் திட்டம் என்று தூற்றின. நீண்ட நாட்கள் இந்த திட்டத்தை நடத்த முடியாது என்று எள்ளி நகையாடின.

ஆனால் அனைத்தையும் தவிடுபொடியாக்கி மக்கள் பெரும் வரவேற்பை அளித்தனர். வேறு வழியின்றி எதிர்த்த கட்சிகள் அம்மா உணவகத்தை பாராட்டி புளாங்காகிதம் அடைந்தது தனிக்கதை.

ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்கள், வண்டி தொழிலாளர்கள், முதியோர்கள், லாரி ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பினர் அளித்த வரவேற்பு எதிர்க்கட்சிகளின் வாயை மூடின.

சென்னையில் கொரோனா தொற்றின் கோர தாண்டவத்தின் போதும், 144 தடை உத்தரவின் போது பெருமளவுக்கு கை கொடுத்தது அம்மா உணவகங்கள். அம்மா உணவகம் இல்லை என்றால் பட்டினிதான் என்று ரிக்ஷா தொழிலாளிகள் முதல் அனைவரும் திட்டத்தை பாராட்டி மகிழ்ந்தனர்.

சொந்த ஊர் போக முடியாமல் சென்னையில் தங்க வைக்கப்பட்ட வட மாநில பணியாளர்களின் பசியை போக்கியது அம்மா உணவகங்கள் தான். இவை ஒரு சாதாரண உணவகம் என்று நினைக்க வேண்டாம், மாற்று சமூகத்திற்காக அடித்தளம் என்று பாராட்டுகள் குவிந்தன.

இப்படி மக்கள் மத்தியில் எதிர்பார்க்காத ஆதரவை பெற்ற அம்மா உணவகங்களுக்கு திமுக ஆட்சியில் அமர்ந்த ஆரம்பத்திலேயே சோதனை வந்தது. சென்னையில் அம்மா உணவகத்தை திமுகவினர் சிலர் சூறையாடினர்.

அங்கிருந்த ஜெயலலிதா பேனர்கள் கிழிக்கப்பட்டன. ஊழியர்களுக்கு அடி, உதையும் விழுந்தது. அதன் வீடியோ வெளியே அனைத்து தரப்பினருமே ஷாக் ஆக திமுகவுக்கு பெரும் தர்ம சங்கடமாகியது.

திமுக வந்தால் அம்மா உணவகம் அதோ கதி என்று வெளியான கருத்துகள் நிஜம்தான் என்று எல்லோரும் பேசும் அளவுக்கு இந்த சம்பவத்தின் வீச்சு இருந்தது. உடனடியாக அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் கட்டம் கட்டப்பட்டனர்.

அம்மா உணவகம் மூடப்படாது என்று அரசு அறிவித்தது. ஆனாலும் அதற்கான வேலைகள் தொடங்கி விட்டதாக அப்போது முதலே அதிமுக தொடர்ந்து கூறிய வண்ணம் இருந்தது.

சென்னையில் சில அம்மா உணவகங்களில் இரவு சப்பாத்திக்கு பதில் தக்காளி சாதம் போடப்பட்டது. திமுகவும், தமிழக அரசும் மீண்டும் அதிமுகவுக்கு அவலாகி போக கண்டனங்களும், விமர்சனங்களும் பொங்கின. பின்னர் எந்திர கோளாறு என்று சமாளித்து இப்போது இரவு நேரத்தில் அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி வினியோகிக்கப்பட்டு வருகிறது.

நிலைமை இப்படி இருந்தாலும் மீண்டும் அம்மா உணவகங்கள் மூடப்படுகின்றன என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலா வர ஆரம்பித்தது. இந் நிலையில், தமிழக அரசை தமது கேள்விகளால் மீண்டும் துளைத்தெடுத்து இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவு வருமாறு: ஏழைகள் பசியாற எளிதாய் உணவளித்து, அன்னையின் பரிவோடு, அவசிய உணவளித்த, அம்மா உணவகத்தை @arivalayam   மூடலாமா?

மக்கள் பயன்படுத்தும் மகத்தான திட்டத்தை, மாற்றுக் கட்சி தொடங்கியதால், மறுக்கலாமா?  விருந்தோம்பல் நம் மரபல்லவா? ஏழைகள் பசிப்பிணி போக்கும் அம்மா உணவகத்தை எதிர்க்காமல் தொடரவும் என்று கூறி இருக்கிறார். அண்ணா அறிவாலயம், அம்மா உணவகத்தை மூட வேண்டாம் என்ற இந்த கோரிக்கைக்கு கட்சி பேதமின்றி ஆதரவுகள் வருவது தான் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் எனலாம்….!

 

ஏழைகள் பசியாற எளிதாய் உணவளித்து, அன்னையின் பரிவோடு, அவசிய உணவளித்த, அம்மா உணவகத்தை மூடலாமா?
மக்கள் பயன்படுத்தும் மகத்தான திட்டத்தை, மாற்றுக் கட்சி தொடங்கியதால், மறுக்கலாமா? விருந்தோம்பல் நம் மரபல்லவா?
ஏழைகள் பசிப்பிணி போக்கும் அம்மா உணவகத்தை எதிர்க்காமல் தொடரவும்.

— K.Annamalai (@annamalai_k)
click me!