காங்கிரஸில் இருந்து விலகினார் அமரீந்தர் சிங்… புதிய கட்சி பெயரும் அறிவிப்பு!!

By Narendran SFirst Published Nov 2, 2021, 6:13 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி அமரீந்தர் சிங், தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவிற்கு அனுப்பியுள்ளார். அத்தோடு தனது புதிய கட்சியின் பெயரையும் அவர் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவர் அமரீந்தர் சிங். இவர் அண்மையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ் ஜோத் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து திடீரென ராஜினாமா செய்தார். இதனிடையே கட்சி மேலிடத்துடன் அதிருப்தியில் இருந்த அமரீந்தர் சிங் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அவர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை அவரது வீட்டில் அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அமரீந்தர் சிங் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் காங்கிரஸில் தொடர்ந்து இருக்க மாட்டேன் என்றும் தான் ஏற்கெனவே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டதாகவும் தெரிவித்தார். அதேசமயம் பாஜகவில் சேர மாட்டேன் எனக் கூறிய அவர், தான் 52 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாகவும் தனக்கு சொந்த நம்பிக்கைகள், சொந்த கொள்கைகள் உள்ளதாகவும் கூறியதோடு தன்னை நடத்திய விதம் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

தான் எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றும் தான் செய்வேன் என்றபடி ஆளுநரிடம் சென்று ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை சந்தேகித்தால், தன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருந்தால் என்ன செய்வது? நம்பிக்கை இல்லாவிட்டால், தான் கட்சியில் இருப்பதன் பயன் என்ன? தன்னை இந்த விதத்தில் நடத்த இனிமேலும் அனுமதிக்க போவதில்லை என்று காங்கிரஸுக்கு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளதாக அமரீந்தர் சிங் கூறினார். மேலும் அதற்காக தான் அத்துடன் நிற்க மாட்டேன். அமித் ஷாவைச் சந்தித்த பிறகு காங்கிரஸ் உட்பட அனைவரும் தன்னிடம் எழுப்பும் கேள்வி தான் பாஜகவில் சேரப்போகிறீர்களா என்பதுதான். தான் பாஜகவில் சேரப்போவதில்லை என்பதை தெளிவுப்படுத்திய அமரீந்தர் சிங், தான் விரைவில் ராஜினாமா செய்வேன் என்றும் தான் இரண்டாவதாக முடிவுகளை எடுக்கும் நபர் அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் கூறியபடியே இன்று அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சோனியாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், தான் புதிதாக துவங்கியுள்ள கட்சிக்கு பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனப் பெயரிட்டுள்ளார். இதற்கிடையே, காங்கிரசுடன் சமரச பேச்சு நடத்துவதாக வெளியான தகவலை முழுமையாக மறுத்த அமரீந்தர் சிங், சமாதானத்திற்கான காலம் கடந்து விட்டது, காங்கிரசில் இருந்து வெளியேறுவது நீண்ட சிந்தனைக்கு பிறகே எடுத்த முடிவு, அதுவே இறுதி முடிவு என கூறியிருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவிற்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அமரீந்தர் சிங், ராகுல் மற்றும் பிரியங்காவால் ஆதரிக்கப்பட்ட சித்துவின் ஒரே எண்ணம், தன்னையும் தனது அரசாங்கத்தை கலங்கப்படுத்துவது தான் எனக் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், தான் துவங்க உள்ள கட்சிக்கு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்னும் பெயரை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!