8 ஆம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா..! பாஜகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எத்தனை.? இபிஎஸ்யிடம் ஆலோசிக்க திட்டம்

By Ajmal KhanFirst Published Jun 5, 2023, 1:42 PM IST
Highlights

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 8 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல்- பாஜக தீவிரம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மாநில தலைவர்களுக்கு பல்வேறு உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து இருந்தது.  மாநிலத் தலைவர்களும் இதற்கான பணிகளை துவங்கியிருந்தனர்.  ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கண்டறிந்து அந்த தொகுதிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதேபோன்று தமிழகத்திலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கண்டறியப்பட்டு அந்த தொகுதிகளில் களப்பணியானது தீவிரம்படுத்தப்பட்டு வருகிறது தமிழகத்தை பொறுத்தவரை 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டுமென அண்ணாமலை கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்து வருகிறார். 

அதிமுக- பாஜக மோதல்

தமிழகத்தைப் பொறுத்தவரை தென்சென்னை, கோவை, கரூர், திருப்பூர், நீலகிரி, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளை குறி வைத்து செயல் வீரர்கள்  கூட்டம் நடத்தி வருகிறது. வாக்குச்சாவடி முகவர்களையும் தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக- பாஜக தலைவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக தமிழகத்தில் இந்த கூட்டணி தொடருமா அல்லது முற்றுப்பெறுமா என்று கேள்வி எழுந்திருந்தது. இதனையடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரில் டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலையிடம் நேரடியாக  சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தமிழகத்தில் அதிமுக பாஜக ஒன்றாக இருந்து தேர்தலில் எதிர் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது. எனவே தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒன்றாக செயல்பட்டு திமுகவே வீழ்த்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 

தமிழகம் வரும் அமித்ஷா

அப்போது தமிழகத்தில் பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கும் இடங்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.  தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணி அமைக்க உள்ளதால் தேர்தல் சமயத்தில் தான் தொகுதி தொடரபான முடிவு எடுக்க முடியும் என  அதிமுக சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வருகின்ற 8 ஆம்தேதி தமிழகம் வரும் அமித்ஷா,  மோடி அரசு 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தநேரியில் மாலை நடைபெறும் பிரமாண்ட பொதுகூட்டத்தில் பங்கேற்க உள்ளார். விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலமாக  பாஜக 9 ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். 

பாஜகவிற்கு தொகுதி எத்தனை.?

சாதனை விளக்க கூட்டத்தைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தனித்தனியாக அமித்ஷா சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ் இனைத்து கொண்டு செயல்படுவது தொடர்பாகவும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் பாஜகவிற்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்த உறுதியான தகவலை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு.! இனிப்பு கொடுத்த கொண்டாடிய தமிழக அமைச்சர்கள்.? - ஜெயக்குமார்

click me!