நான் அறிவாலய பிச்சைக்காரனா.? எங்கள் இயக்கம் கருவாட்டுச் சாம்பாரா.? எடுப்பு, தொடுப்பு என சு.ப.வீ. ஆவேசம்..!

Published : Sep 28, 2021, 08:56 AM IST
நான் அறிவாலய பிச்சைக்காரனா.? எங்கள் இயக்கம் கருவாட்டுச் சாம்பாரா.? எடுப்பு, தொடுப்பு என  சு.ப.வீ. ஆவேசம்..!

சுருக்கம்

திராவிடக் கருத்தியல் பரவுமானால் தமிழ் இன, மொழி உணர்வும் பரவும்! சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன எங்கும் நிலைபெறும் என்று திராவிட இயக்கப் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக சு.ப.வீரபாண்டியன் அவருடைய ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், நான் மதிக்கும் தோழர் மணியரசன், எனக்கு "அறிவாலயத்தின்  ஒட்டுத்திண்ணைக் குடியிருப்பாளர்"  என்று ஓர் இலவசப் பட்டம் வழங்கினார். நேற்று ஹெச்.ராஜா, இன்னும் ஒரு  படி மேலே போய்,  ஒரு நேர்காணலில், "சுப. வீரபாண்டியன், அறிவாலயத்தில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரன்" என்று கூறியுள்ளார். எடுப்பு மணியரசனுடையது, தொடுப்பு ஹெச். ராஜாவினுடையது! என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதோடு  அல்லாமல்,  திராவிடம் என்னும் சொல்லைத் தாக்குவதிலும், தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து வந்த மொழியன்று, தனித்தியங்கவல்லது என்று கூறிய கால்டுவெல்லை மிகக் கடுமையாக இழிவுபடுத்துவதிலும் இருவருக்கும் இடையில் ஒரு போட்டியே நடக்கிறது என்று கூறலாம். 
என் மீது  இவர்களுக்கு ஏன் இத்தனை  கோபம்? ஹெச். ராஜா என் மீது கோபப்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. நான் பார்ப்பனியத்தைக் கடுமையாகச் சாடுகிறேன். சாதி ஒழிப்பை, பாலினச் சமத்துவத்தைப் பெரியார் வழிநின்று ஆதரிக்கிறேன். எனவே அவர் என்மீது சினம் கொள்வது இயற்கையானதே! ஆனால், தோழர் மணியரசன் என்னைத் தனிப்பட்ட முறையில் ஏன் தாக்க வேண்டும்? எங்கள் இயக்கத்தை 'கருவாட்டுச் சாம்பார்' என்று ஏன் நகையாட வேண்டும்?  நான் அவரை, அவரது நீண்ட அரசியல் அனுபவத்தை, பரந்துபட்ட அவரின் படிப்பை என்றும் மதிக்கிறவன். என் அரசியல் முன்னோடிகளில் அவரும் ஒருவர் என்று பலமுறை பதிவு செய்துள்ளவன். இப்படித் தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியக் கொள்கையை, தமிழ் இன, மொழி உணர்வைப் போற்றி வரவேற்கின்றவன். 
உண்மையைச் சொன்னால், திராவிடக் கருத்தியலை முன்னெடுக்கும் நாங்களும், தமிழ்த் தேசியர்களும் நட்பு சக்தியாக நின்று பார்ப்பனியத்தை,  சாதிய, பாலின ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள். ஆனால், தோழர் மணியரசனோ, எல்லா உரைகளிலும், எல்லா நேர்காணல்களிலும் திராவிடத்தை எதிர்ப்பதையும், கி.வீரமணி, என் போன்றோரையும் குறிவைத்துத் தாக்குவதையுமே  தன் தலையாய பணியாகக் கொண்டுள்ளார்.  நாட்டில் ஆயிரம் சிக்கல்கள் உள்ளன. அவற்றைப் பற்றி ஒன்றும் பேசுவதில்லை. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கூடப்  போற்றும்வண்ணம் ஒரு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது குறித்தும் பேசுவதில்லை. ஹெச்.  ராஜாவுக்கு  இணையாக மணியரசன் என்னை ஏன் தாக்க வேண்டும் என்பது புரியவில்லை.
தொடர்ந்து நடைபெறும் திராவிடப் பள்ளியும், புதிதாக இளைஞர்களைத்  திராவிடக் கருத்தியல் நோக்கி அழைத்து வருவதும் காரணங்களாக இருக்குமோ? சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திராவிடப் பள்ளியில் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஐநூற்றை நெருங்கிக் கொண்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (25.09.2021) இவ்வாண்டு திராவிடப் பள்ளியில்  இணைந்தவர்களுக்கு, இணைய வழியில் அறிமுக வகுப்பு நடைபெற்றது.  தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழ் இளைஞர்கள் பலரும் இப்பள்ளியில் இணைந்துள்ளனர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இணைந்திருப்பது வியப்பாக இல்லை. ஆனால், நியூசிலாந்து, ஜப்பான், ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ, சுவீடன், மெக்ஸிகோ போன்ற நாடுகளில் வாழ்பவர்கள்கூட இவ்வாண்டு திராவிடப் பள்ளியில் இணைந்துள்ளனர். 
மேலும். இணைந்துள்ளவர்களில், சரிபாதிக்கும் மேலாக, அதாவது 283 பேர் இளைஞர்கள். இப்போதும் கூட, இவையெல்லாம் ஹெச். ராஜாக்களைத்தானே கோபப்படுத்த வேண்டும், தோழர்  மணியரசன்களை ஏன் கோபப்படுத்துகிறது என்று புரியவில்லை! இன்னொரு காரணமும் இருக்கலாம். மணியரசன் மொழியில் 'கருவாட்டுச் சாம்பார்' என அழைக்கப்படும் எங்கள் திராவிட இயக்கப் பேரவையில், புதிதாக ஓசூர், பாகலூர் பகுதிகளில் இருந்து 23 பேரும், அரியலூர், பெரம்பலூர், குன்னம்  பகுதிகளில் இருந்து 44 பேரும் இப்போது  இணைந்துள்ளனர். இணைந்துள்ள இரண்டு பெண்கள் உள்பட 23 பேரும் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள்! இப்போதும் சொல்கிறேன். திராவிடக் கருத்தியல் பரவுமானால் தமிழ் இன, மொழி உணர்வும் பரவும்! சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன எங்கும் நிலைபெறும். 
இவைதான் ஹெச். ராஜாவின் கோபத்திற்குக் காரணங்கள்.  தோழர் மணியரசனுக்குமா? போகட்டும், 1980-களின் இறுதியில், நான் முதன்முதலில் சந்தித்த, பொதுவுடைமையாளர் தோழர் பெ. மணியரசன் இன்றும் என் நெஞ்சில் தனித்த இடம் பெற்றவர். எனவே, மணியரசன் என்னை எவ்வளவு இழிவாகப் பேசினாலும், நான் ஒருநாளும் அவரைத் தரக்குறைவாகப்  பேச மாட்டேன்.” என்று சு.ப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!