
அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஒப்புதலோடு தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாகவும், மூன்று மாத காலத்திற்குள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிப்பது குறித்தும் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டம் நிறைவு பெற்றதை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்தோம். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. உரிய நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும்.
அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி. தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணி தொடர்கிறது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற செயல்களை ஊக்கப்படுத்தாமல் பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை தலைவர்கள் பற்றி கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. எங்களுடைய தலைவருக்கு நிகரானவர் இனி தமிழ்நாட்டில் பிறக்கப் போவது கிடையாது.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. அதிமுக கட்சியின் கொடி மற்றும் லெட்டர் பேடு பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம் கட்சி நடத்தவில்லை, கடை நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து யார் வந்தாலும் தாயுள்ளத்தோடு வரவேற்போம் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.