கூட்டணிக்கு கேப்டன் தேவை... இலையை நெருக்கும் தாமரை!

By Asianet TamilFirst Published Feb 27, 2019, 12:21 PM IST
Highlights

தேமுதிக கூட்டணிக்கு வந்தே ஆக வேண்டும் என்று அதிமுகவுக்கு பாஜக நெருக்கடி கொடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேமுதிக கூட்டணிக்கு வந்தே ஆக வேண்டும் என்று அதிமுகவுக்கு பாஜக நெருக்கடி கொடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவுடன் தொகுதி உடன்பாடு முடிந்துவிட்ட நிலையில், தேமுதிகவுக்கு 3 தொகுதிகளை வழங்க அதிமுக முன்வந்ததாக தகவல் வெளியானது. ஆனால், பாமகவுக்கு வழங்கியதுபோல 7+1 தொகுதிகள் வழங்க வேண்டும் என்று தேமுதிக கறார் காட்டியதால், கூட்டணி பேச்சுவார்த்தை முன்னேற்றம் காணாமல் அப்படியே உள்ளது. ஏற்கனவே 12 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு போய்விட்ட நிலையில், எஞ்சிய 28 தொகுதிகளில் குறைந்தபட்சம் 23 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டமிட்டிருந்தது. 

தேமுதிக மட்டுமல்லாமல் உதிரிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கவும் அதிமுக நினைத்திருந்தது. ஆனால், கடந்த காலங்களைப்போல தேமுதிக அடம்பிடிப்பதால் கூட்டணியில் முட்டுக்கட்டை விழுந்திருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தைச் சந்தித்த பிறகு தேமுதிகவுக்கான டிமாண்ட் மேலும் அதிகரித்திருக்கிறது. இரண்டு கூட்டணியில் எந்தக் கூட்டணி நன்றாக ‘கவனி’க்குமோ அந்தக் கூட்டணிக்கு செல்ல தேமுதிக மதில் மேல் உள்ள பூனையாக உட்கார்ந்திருக்கிறது. 

தேமுதிக எப்படியும் அதிமுக கூட்டணிக்கு வரும் என்று அதிமுகவில் சிலரும்; வந்தால் வரட்டும் என்ற இன்னொரு தரப்பினரும் பேசத் தொடங்கிவிட்டதால் தேமுதிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற ஊகங்கள் றெக்கைக்கட்டி பறக்கினறன. இந்நிலையில் தேமுதிக கூட்டணிக்கு வந்தே ஆக வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக - காங்கிரஸ் கூட்டணியை முழுமையாக எதிர்க்க, கூட்டணியில் தேமுதிக இருப்பது அவசியம் என்று பாஜக மேலிடம் அதிமுக தலைமையை நெருக்கிவருகிறது. 

கடந்த தேர்தலில் தமிழகத்தில் ஜெயலலிதா அலை வீசியபோதும் கன்னியாகுமரி, தருமபுரியில் தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற கேப்டனும் ஒரு காரணம் என்று சொல்லும் பாஜக, தங்களைப் பொறுத்தவரை கூட்டணிக்கு தேமுதிக வருவது அவசியம் என்று அதிமுக தலைமையிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடக்கத்திலிருந்தே கூட்டணிக்காக பாஜகவுடன்தான் தேமுதிக பேசிவந்தது. இடையே திமுகவும் விஜயகாந்தை இழுக்க முயற்சியில் இறங்கியதால், அதிர்ச்சியடைந்துள்ள பாஜக, அவரை எப்படியும் கூட்டணிக்கு அழைத்துவந்துவிட வேண்டும் என்று தீவிர முயற்சி செய்துவருகிறது. பாஜகவின் ஆதரவு இருப்பதால்தான் தேமுதிக  நிபந்தனை மேல் நிபந்தனை வைப்பதாகவும் அதிமுக வட்டாரத்திலும் பேசப்படுகிறது. ஸ்டாலின், திருநாவுக்கரசர் சந்தித்து பேசியதை வைத்து தேமுதிக பேரம் பேசுவதை அதிமுக தரப்பில் விரும்பவில்லை. 

இதனால்தான், கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி என்று ஜெயக்குமார் வெளிப்படையாகவே சொன்னார் என்கிறார்கள் அதிமுகவினர். தற்போதைய நிலையில் வறட்டு பிடிவாதம் காட்டாமல், விஜயகாந்த் கேட்கும் தொகுதிகளை கொடுத்து கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுங்கள் என்று பாஜக மேலிடம் அதிமுகவுக்கு யோசனை கூறியிருப்பதாக பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், ஏற்கனவே சொன்னதிலிருந்து இதுவரை அதிமுக தரப்பு இன்னும் இறங்கிவரவில்லை என்பதே தற்போதைய நிலை. இதனால், மதில் பூனையாகவே தேமுதிக உட்கார்ந்துகொண்டிருக்கிறது. 

click me!