
விழுப்புரத்தில் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து வாதிட்டு வருகிறது. 50 ஆயிரம் மெட்ரிக் டன் உள்ளது என்றும் 7 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் உள்ளது என்றும் மத்திய அரசு வாதிடுகிறது. அப்படியென்றால் ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஆக்சிஜன் தயாரிக்கத் திறக்கலாம் என்று மத்திய அரசு சொல்வதை விளக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளது. தமிழக அரசு தன் தரப்பு வாதங்களை முறையாக நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை.
தமிழகத்திற்கு 450 மெட்ரிக் டன் தேவை. தற்போது 400 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் 50 மெட்ரிக் டன் பற்றாக்குறை என்பதையும் மத்திய அரசுக்குத் தெரிவித்த தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் அதை ஏன் தெரிவிக்கவில்லை? ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்தியத் தொகுப்புக்கு அனுப்பப்படும் என்றும், தமிழகத்துக்கு தற்போது தேவைப்படவில்லை என்றும் மத்திய அரசு சொல்கிறது. தமிழக அரசு தங்களுக்குத் தேவை உள்ளது என்று ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி அழுத்தமாக எழுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, விசிக, மதிமுக போன்ற கட்சிகளை தமிழக அரசு திட்டமிட்டுத் தவிர்த்துவிட்டது. மத்திய அரசின் முடிவுக்குத் திமுகவை உடன்பட வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். 4 மாதங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கண்காணிப்புக் குழு என்பது மத்திய அரசின் விருப்பத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான என்எல்சி, பெல் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் வேதாந்தா குழுமம் உள்ளது. அங்கெல்லாம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முனைப்பு காட்டவில்லை. தமிழகத்தில் மூடப்பட்டுள்ள நிறுவனத்தில் உற்பத்தி செய்ய எடுக்கப்பட்ட முடிவு என்பது முரண்பட்டது. இருந்தாலும், கொரோனா அலை தாக்கத்தால் மக்களுக்காக விசிக இதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதைவிட மற்ற இடங்களுக்கு அதைக் கொண்டு செல்வது பெரிய இடர்ப்பாடாக இருக்கும் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். அந்தந்த மாநிலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவே முயற்சி எடுக்க வேண்டும்.
தற்போது தமிழகத்துக்குத் தேவைப்படும் 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படுகிறது. ஒரு வேளை கேரளாவுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால் தமிழகத்தின் தேவை எப்படிப் பூர்த்தி ஆகும்? தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜனை மாநில அரசு உற்பத்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும். தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனைத் தமிழகத்துக்கே வழங்க வேண்டும். எனவே தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.