தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் கிடக்குது.. இப்போ தேவை களப்பணி.. ஜோதிமணி அதிரடி..!

By Asianet TamilFirst Published Apr 27, 2021, 8:37 PM IST
Highlights

கொரொனாவாலும், போதுமான மருத்துவ வசதி இல்லாமலும் மக்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தேவை களப்பணிதான். கொண்டாட்டங்கள் அல்ல என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 

தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்பட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மே 2-இல் நடைபெற உள்ளது. தற்போது கொரோனா பரவல் நாடும் முழுவதும் உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், “தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம் அடைய தேர்தல் ஆணையமே காரணம். நீதிமன்றத்தின் அறிவுரைகளை தேர்தல் ஆணையம் காதில் வாங்கிக்கொள்ளாததே இரண்டாம் அலை பரவ காரணம். இதனால் தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை” என்று மிகக் காட்டமாக விமர்சித்திருந்தது.
இன்னொரு வழக்கில், கொரோனா விதிமுறைகளை சரிவர பின்பற்றாவிட்டால், வாக்கு எண்ணிக்கை ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்தி வைத்துவிடுவோம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போதும் அதற்கு பின்பும் அரசியல் கட்சிகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது எனத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்தக் கட்டுப்பாட்டை கரூர் எம்.பி. ஜோதிமணி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், “வாக்கு எண்ணிக்கையின்போதும், தேர்தல் முடிவுக்கு பின்னரும் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளதை வரவேற்கிறேன். கொரொனாவாலும், போதுமான மருத்துவ வசதி இல்லாமலும் மக்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தேவை களப்பணிதான். கொண்டாட்டங்கள் அல்ல” என்று ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.
 

click me!