மம்தாவை அகற்றணும்.. பாஜக ஆட்சிக்கு வரணும் என்பதில் மட்டுமே கவனம்... மோடி அரசை தெறிக்கவிட்ட கே.எஸ்.அழகிரி!

By Asianet TamilFirst Published Apr 27, 2021, 8:53 PM IST
Highlights

கடந்த 7 மாதங்களாக 165 ஆக்சிஜன் ஆலைகளில் உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டு மக்களின் உயிரை உலுக்கிக் கொண்டிருக்கிற கொடிய கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பிரதமர் மோடி, அதற்கான பொறுப்பை மாநில அரசுகள் மீது சுமத்தி, தட்டிக் கழிப்பதைவிட ஒரு பொறுப்பற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையின் பாதிப்பை உணர்ந்த மத்திய அரசு, அதை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பு வசதிகள் எதையும் செய்யவில்லை. அதனால், இன்றைக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு, வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை என நாள்தோறும் 2,000-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் தொடர்ந்து மடிந்து வருகின்றன.
ஆனால், பாஜகவின் முன்னுரிமையோ மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை அகற்ற வேண்டும், மகாராஷ்டிராவில் ஆளுகிற பாஜக அல்லாத ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பது மட்டுமே. நாட்டின் நிலைமை கைமீறிப் போய்விட்டதால் கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பேராயுதமாக விளங்குகிற தடுப்பூசி விற்பனையைத் தனியார் துறையிடம் முற்றிலும் ஒப்படைத்ததைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. 136 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுகிற முதன்மைப் பொறுப்பை, கடந்த காலங்களில் காலரா, அம்மை, போலியோவை ஒழிப்பதில் மத்திய அரசுகள் ஏற்றதைப் போல, இன்றைய மத்திய பாஜக அரசும் ஏற்றிருக்க வேண்டும்.
ஆனால், அதை ஏற்பதற்கு மாறாகக் கடந்த ஏப்ரல் 19ம் தேதி புதிய தடுப்பூசிக் கொள்கையை மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமல் அறிவித்தது. அதன்படி, 45 வயதுக்கு மேற்பட்ட 30 கோடி மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுகிற பொறுப்பை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டது. மீதி 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 60 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடுகிற பொறுப்பை லாவகமாக மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், மத்திய அரசுக்கு வழங்குகிற தடுப்பூசியின் விலை ரூ.150. ஆனால், மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிற விலை ரூ.400. இதன்படி 60 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட ரூபாய் 24 ஆயிரம் கோடிக்கான நிதிச்சுமை மாநிலங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.


இந்திய மக்களால் பதவியில் அமர்த்தப்பட்ட பிரதமர் மோடி, இத்தகைய பாரபட்சத்தை மக்கள் மீது காட்டுவது ஏன்? ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் கொரோனா நோயை எதிர்கொள்ள 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட 30 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட ரூ.150 வீதம் ரூ.4,500 கோடிதான் தேவை. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள மீதிப் பணத்தை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு மறுப்பது ஏன்? எந்த மாநில அரசையும் கலந்தாலோசிக்காமல் தனியார் நிறுவனங்களோடு பேசி, விலையை நிர்ணயிக்கிற உரிமையை மத்திய அரசுக்கு யார் கொடுத்தது? இதன் மூலம் மாநில அரசுகளைப் புறக்கணித்ததுதான் மோடி அரசின் கூட்டுறவு கூட்டாட்சியா?
அதேபோல, இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 14 கோடி, அதாவது, 10 சதவிகித மக்களுக்குத்தான் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவுதான். ஆனால், இஸ்ரேல் நாட்டில் 59 சதவிகிதமும், பிரிட்டனில் 49 சதவிகிதம், அமெரிக்காவில் 40 சதவிகிதமும் தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போடப்பட்டுள்ளன. உலக உற்பத்தியில் 60 சதவிகிதத் தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்ட பாஜகவினர், இந்திய மக்களுக்குத் தடுப்பூசி போடுவதில் பின்தங்கியிருப்பது ஏன் ?
அதேபோல, இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த நவம்பர் 2020இல் அறிக்கை தாக்கல் செய்தது. இந்தியாவில் நாளொன்றுக்கு 700 டன் மருத்துவ ஆக்சிஜன் தேவை இருந்தது. இது கரோனா முதல் அலையின்போது மூன்று மடங்காகி 2,800 டன்னாக உயர்ந்தது. கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் நாளொன்றுக்கு 3,842 மெட்ரிக் டன்னாக இருந்த தேவை, கிடுகிடுவென உயர்ந்து இன்றைக்கு 6,200 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களில் 8,000 டன்னாக இது உயரும்.
கரோனா நோயாளிகள் நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில், ஆக்சிஜன் தேவையை உணர்ந்து அதற்கான உற்பத்தியைப் பெருக்குவதற்கு கடந்த ஓராண்டு காலத்தில் மத்திய பாஜக அரசு எடுத்த முயற்சிகள் என்ன? அதற்கு மாறாக மிகுந்த அலட்சியப் போக்குடன்தான் நடந்து கொண்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவ சேவை மையம் 162 மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க டெண்டர் கோரியது. இதற்கான தொகை ரூ.201.58 கோடி. மொத்தம் 162 ஆலைகளுக்கு அனுமதி அளித்ததில் 32 ஆலைகள்தான் தற்போது உற்பத்தி செய்கின்றன.
மத்திய அரசின் அலட்சியப் போக்கினால் மற்ற ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயலற்று முடங்கிக் கிடக்கின்றன. ஒரு ஆக்சிஜன் ஆலை அமைக்க 45 நாட்கள்தான் தேவை. ஆனால், கடந்த 7 மாதங்களாக 165 ஆக்சிஜன் ஆலைகளிலும் உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆக்சிஜனைப் பொறுத்தவரை உற்பத்தி ஒருபக்கம் இருந்தாலும் அதை எடுத்துச் செல்ல போக்குவரத்து நிர்வாகத்திற்கான எந்த ஏற்பாட்டையும் மத்திய அரசு செய்யவில்லை. இதற்குத் தேவையான க்ரியோஜனிக் வாகனங்களை ஏற்பாடு செய்யவில்லை. இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் மடிகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதைவிடக் கொடுமை என்னவென்றால், ஏறத்தாழ 9,018 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருக்கிறது. இதன் மூலம், கொரோனா நோயாளிகளின் உயிருடன் மோடி அரசு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறது.


அதேபோல, கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்து இந்தியாவில் ரூபாய் 3,500 விலையில் விற்கும் நிலையில், பற்றாக்குறை காரணமாக கள்ளச் சந்தையில் 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேநேரத்தில், 1 கோடியே 10 லட்சம் ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருக்கிறது. கடும் எதிர்ப்பு வந்த நிலையில்தான் கடந்த 10 நாட்களுக்கு ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தியிருக்கிறது. அதேபோல, இன்றைக்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3 லட்சத்திற்கும் அதிகமாகச் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு என்பது மே 8ஆம் தேதி வாக்கில் 4.4 லட்சத்தை அடையும் இந்திய அறிவியல் கழகம் அபாயச் சங்கு ஊதியுள்ளது. அதேபோல, மனித உயிரிழப்புகளும் பலமடங்கு கூடுதலாக இருக்கும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை எச்சரிக்கையாகக் கருதி, போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அறிக்கையில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 

click me!