கேட்டது கிடைக்கலனா? வேற கூட்டணி தான்..! சரத்குமார் நடையை கட்டியது ஏன்?

By Selva KathirFirst Published Feb 27, 2021, 11:15 AM IST
Highlights

சமத்துவ மக்கள் கட்சி என்கிற பெயரில் கட்சி நடத்தி வரும் சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி என்கிற பெயரில் கட்சி நடத்தி வரும் சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை  மற்றும் நாடாளுமன்ற தேர்தல் சமயங்களில் சிறிய சிறிய அரசியல் கட்சிகளுக்கு பெரிய அரசியல் கட்சிகள் கை நிறைய காசும் ஒன்று இரண்டு தொகுதிகளும் ஒதுக்குவது வழக்கம். இதனை உணர்ந்து துவக்கப்பட்டது தான் சமத்துவ மக்கள் கட்சி எனலாம். ஏனென்றால் திமுகவில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி வெளியேறிய சரத்குமார் மதுரையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து புதிய கட்சி துவங்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக மதுரை வந்து இறங்கிய சரத்குமாரை அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவர் சார்ந்த ஜாதியினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வரவேற்றனர்.

ஆனால் அவர்களை எல்லாம் எங்கே அழைத்துச் செல்கிறோம்என்று கூட சொல்லாமல் நேராக தேனி அருகே ஜெயலலிதா தங்கியிருந்த இடத்திற்கு சென்று அதிமுகவில் இணைந்து கொண்டார் சரத்குமார். அது சட்டப்பேரவை தேர்தல் சமயம் என்பதால் ஜெயலலிதாவிற்கு தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய ஒரு நட்சத்திர பேச்சாளர் தேவை. அந்த வகையில் சரத்குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டார். இதற்காக கணிசமான எண்ணிக்கையில் சூட்கேஸ்கள் அப்போது கை மாறியதாக கூட பேச்சு அடிபட்டது. அந்த தேர்தலில் சரத்குமாருக்கு சீட் எதுவும் கொடுக்கப்படவில்லை.

இருந்தாலும் ஆங்காங்கே பிரச்சாரம் மட்டும் செய்து வந்த சரத்குமார் 2007ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். அந்த சமயத்தில் வந்த திருமங்கலம் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளரையும் சரத்குமார் நிறுத்தினார். ஆனால் அந்த தொகுதியில் வெறும் 831 வாக்குகளை மட்டுமே சமத்துவ மக்கள் கட்சி பெற்றது. இது தான் சரத்குமார் சார்ந்த சமுதாயம் கணிசமாக வசிக்க கூடிய திருமங்கலம் தொகுதியில் கட்சி தொடங்கிய புதிதில் சரத்குமார் கட்சி பெற்ற வாக்கு. அத்தோடு சரத்குமார் கட்சி தனியாக நின்ற முதலும் கடைசியுமான தேர்தலும் இது தான்.

தொடர்ந்து 2011ம் ஆண்டு நாடார் சங்கங்கள் இணைந்து தேர்தலில் களம் இறங்க இருந்த நிலையில் அவர்களை எல்லாம் ஜெயலலிதாவிடம் அழைத்துச் சென்று மறுபடியும் அடகு வைத்து சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும், நாடார் அமைப்புகளுக்கு ஒரு தொகுதியும் பெற்றார். ஆனால் இரண்டையும் சமத்துவ மக்கள் கட்சி கணக்கில் சேர்த்து தென்காசி, நாங்குநேரியில் வெற்றி பெற்று இரண்டு எம்எல்ஏக்களை சமத்துவ மக்கள் கட்சி சட்டப்பேரவை அனுப்பியது. அதன் பிறகு 2016 தேர்தலில் மறுபடியும் அதிமுகவுடன் கூட்டணி. ஆனால் இந்த முறை ஒரே ஒரு தொகுதி. அதுவும் திருச்செந்தூர் தான். அங்கு போட்டியிட்ட சரத்குமார் தோல்வி அடைந்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக சரத்குமார் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருநது விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் வழக்கம் போல் ஒரே ஒரு தொகுதி அதுவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக மேலிடம் உத்தரவிட்டது தான்என்கிறார்கள். ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்கு வழக்கம் போல சில பல சூட்கேஸ்களை கொடுக்க அதிமுக மேலிடம் முன்வந்தது. அது வழக்கமான அளவில் இருப்பதை சரத்குமார் தரப்பு விரும்பவில்லை என்கிறார்கள். இந்த தேர்தலில் சிறிது அதிகரித்து வழங்க வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில் உங்களுக்கு இதுவே ஓவர் என்று அதிமுக தரப்பு பதில் அளித்துள்ளது.

இதனால் டென்சன் ஆகி புதிய கூட்டணியில் இணைந்தாலும் சூட்கேஸ்கள் எண்ணிக்கையை அதிகரித்தால் மறுபடியும் அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு தயார் என்றே சரத்குமார் தரப்பு கூறி வருகிறதாம். தொகுதியை பொறுத்தவரை தனது மனைவி ராதிகாவிற்கு ஒரு தொகுதி போதும் என்றே சரத்குமார் தரப்பு தெரிவித்துள்ளதாம்.

click me!