அதிமுக கொடுத்த பைனல் ஆஃபர்..பர்..! ரிஜெக்ட் செய்த தேமுதிக..! அடுத்து என்ன?

By Selva KathirFirst Published Feb 27, 2021, 11:03 AM IST
Highlights

எப்போதும் திரை மறைவு பேச்சுவார்த்தையில் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்து கொண்டு வெளிப்படையான பேச்சுவார்த்தையை தொடங்குவது தான் தேமுதிகவின் அரசியல் டேக்டிக்ஸ். 

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கொடுத்த பைனல் ஆஃபரையும் தேமுதிக நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்போதும் திரை மறைவு பேச்சுவார்த்தையில் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்து கொண்டு வெளிப்படையான பேச்சுவார்த்தையை தொடங்குவது தான் தேமுதிகவின் அரசியல் டேக்டிக்ஸ். இது கடந்த 2016 தேர்தல் வரை அந்த கட்சிக்கு உதவியது. ஆனால் 2019 தேர்தலில் திரை மறைவில் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, அதிமுக மற்ற கட்சிகளுடன் வெளிப்படையாக பேசி தொகுதிப் பங்கீட்டை முடித்து இருக்கும் தொகுதிகளில் 4 தொகுதிகளை தேமுதிகவிற்கு தள்ளிவிட்டது. தற்போதும் கூட திரை மறைவில் தேமுதிக தரப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவிற்கு அதிமுக ஒதுக்கிய 41 தொகுதிகள் வேண்டும் என்பது தான் பிரேமலதாவின் நிலைப்பாடு. ஆனால் தேமுதிகவின் வாக்கு வங்கியை சுட்டிக்காட்டி தற்போது 9 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதியை கூட கொடுக்க முடியாது என்று அதிமுக தரப்பு பேசி வந்தது. ஆனால் இரட்டை இலக்க தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டே ஆக வேண்டும் என்று பிரேமலதா கூறி வந்தார். இதனால் 9 தொகுதிகளை 11 தொகுதிகளாக அதிமுக தரப்பு உயர்த்தியுள்ளது. ஆனால் அதையும் கூட வழக்கம் போல் தேமுதிக தரப்பு ஏற்க மறுத்து வருகிறது.

தங்களுக்கு மாவட்டத்திற்கு ஒரு தொகுதி தேவை என்றும் தங்களின் 10 சதவீத வாக்கு வங்கி இன்னும் அப்படியே தான் உள்ளது என்றும் பிரேமலதா பேசி வருகிறார். ஆனால் இதை எல்லாம் அதிமுக தரப்பு பொருட்படுத்தவில்லை என்கிறார்கள். அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 11 தொகுதிகளை வழங்கத் தயார் என்றும் எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்கிற பட்டியலை கொடுக்கும்படி தேமுதிக தரப்பிடம் மறுபடியும் அதிமுக பேசியுள்ளது. ஆனால் 11 தொகுதிகளுக்கு எல்லாம் கூட்டணிக்கு வர முடியாது என்று பிரேமலதா திட்டவட்டமாக கூறிவிட்டதாக சொல்கிறார்கள்.

அதிமுகவில் கூட்டணிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை 11 தொகுதிகளுக்கு மேல் தேமுதிகவிற்கு வழங்க தங்களிடம் தொகுதிகள் இல்லை என்று பதில் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வழக்கம் போல் சக்கர வியூகத்திற்குள் சிக்கிக் கொண்டது போல் தேமுதிக சிக்கிக் கொண்டுள்ளது. தேமுதிகவை பொறுத்தவரை கடந்த 2011 தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிறகு வெற்றி என்பதை ருசித்துக் கூட பார்க்காத கட்சி. சுமார் 10 வருடங்காக வெற்றியே பெறாத நிலையில் இந்த தேர்தலிலும் எம்எல்ஏக்கள் இல்லை என்றால் கட்சியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் உருவாகும்.

திமுக கூட்டணியில் கண்டிப்பாக தேமுதிகவிற்கு இடம் இல்லை. அப்படியே கொடுத்தாலும் அதிமுக கொடுப்பதை விட குறைவாகவே கொடுப்பார்கள். எனவே அதிமுக கொடுக்கும் 11 தொகுதிகளை வாங்கிக் கொள்ளும் படி அண்ணியாருக்கு தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை வழங்கி வருவதாக கூறுகிறார்கள்.

click me!