அனைத்து சாதியினரும் அர்ச்சகர், அருமை.. 12லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பு எப்போ? முதல்வருக்கு சீமான் கோரிக்கை

Published : Aug 14, 2021, 05:49 PM ISTUpdated : Aug 14, 2021, 06:09 PM IST
அனைத்து சாதியினரும் அர்ச்சகர், அருமை.. 12லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பு எப்போ? முதல்வருக்கு சீமான் கோரிக்கை

சுருக்கம்

இதேபோல, ஆதித்தமிழ்க்குடிகளுக்கு வெள்ளையர்களது ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ஏறத்தாழ 12 இலட்சம் ஏக்கருக்கும் மேலான பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கே வழங்க வழிவகைகளை செய்ய முன்வர வேண்டுமெனக் கோருகிறேன் 

பன்னெடுங்காலமாக கோரிக்கையாக இருந்து வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதலமைச்சருக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் ஆலய அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட 216 பணியிடங்களுக்கான புதிய நியமன ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 

இதற்கான நிகழ்ச்சி சென்னை பசுமை வழிச்சாலை கபாலீசுவரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள், சிரவை ஆதீனம், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுகிசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் மொழியின் பஞ்ச புராணங்கள் என்று போற்றப்படும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பல்லாண்டு, திருவிசைப்பாவுடன், வேதபாடங்கள், வேத ஆகமங்களை பயின்றவர்களுக்கு சிவாலயங்களில் அர்ச்சகர் ஆவதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 

வேதம், நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார் பாசுரங்கள் உள்ளிட்டவற்றில் ஆறு முதல் ஏழு ஆண்டு பயிற்சி நிறைவு செய்த பாட்டாச்சாரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வை சாத்தியப்படுத்தி காட்டியுள்ள மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வரையும் திமுக அரசையும் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பன்னெடுங்காலமாகக் கோரிக்கை முழக்கமாக இருந்த, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச் செயல்படுத்தி, தமிழ் ஓதுவார்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பணிநியமன ஆணை வழங்கியிருக்கும் செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தினை இன்னும் விரிவாக்கம் செய்து, செயலாக்கம் செய்ய வேண்டுமெனும் விருப்பத்தை முன்வைத்து, இத்தகைய சீர்மிகு நடவடிக்கையை முன்னெடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறேன்! இதேபோல, ஆதித்தமிழ்க்குடிகளுக்கு வெள்ளையர்களது ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ஏறத்தாழ 12 இலட்சம் ஏக்கருக்கும் மேலான பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கே வழங்க வழிவகைகளை செய்ய முன்வர வேண்டுமெனக் கோருகிறேன் என சீமான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!