
அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்தது. இதனையடுத்து சிறிது நாட்களில் சசிகலா சிறைக்கு சென்ற பின் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடி சசிகலா நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ப்பட்டது. இது தொடர்பாக வழங்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனையடுத்து அதிமுகவில் புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உட்கட்சி தேர்தல் முடிவடைந்தது
தற்போது அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் மே மாதம் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலைத் தொடர்ந்து கீழ்மட்ட நிலைகள் வரை உள்ள அனைத்து பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. பல்வேறு கட்டங்களாக பகுதி செயலாளர், நகரச் செயலாளர் துணைச் செயலாளர் உள்ளிட்ட பல இடங்களுக்கு தேர்தல் முடிவடைந்து உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மே மாதம் செயற்குழு, பொதுக்குழுவில் நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு அதற்கான ஆவணங்களையும் தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுச்செயலாளர் யார்?
இந்த நிலையில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தனது விருப்ப மனுவை பெற்றார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் இளங்கோவனும் மனுவை பெற்றார். இந்நிலையில், அதிமுக தலைமையிலிருந்து கழக அமைப்பு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வசம் இருந்த சேலம் புறநகர் மாவட்ட செயலாளலார் பொறுப்பு இளங்கோவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் ஒற்றை தலைமை ஒன்ற கோஷம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு குறி வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். எனவே அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.