
மக்கள் நீதி மய்யத்தில் , மாவட்டச் செயலாளர் பதவியை ஏற்று பணியாற்ற வரும்படி மக்கள் நீதி மய்யம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டம் பிடித்த நிர்வாகிகள்
நடிகர் கமல்ஹாசன் 2018-ஆம் ஆண்டில் மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். பின்னர் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிட்டது. இத்தேர்தலில் சுமார் 4 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது. இதனையடுத்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மநீம போட்டியிட்டது. இத்தேர்தலில் ஓரிடத்திலும் வெல்லாத மநீம, சுமார் இரண்டரை சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இதனையடுத்து அக்கட்சியில் மாநிலம், மாவட்ட அளவில் பதவியிலிருந்தவர்கள் அக்கட்சியை விட்டு விலகிச் சென்றார்கள். அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் ஓரிடத்திலும் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறவில்லை.
மநீமவில் எழுச்சி
கட்சியை விட்டு நிர்வாகிகள் பலர் சென்றுவிட்ட நிலையில், அக்கட்சி சார்பில், காலியாக உள்ள பதவிகளை ஏற்று பணியாற்ற வருமாறு அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மக்களுக்கான தேவைகளை சேவைகளாக செய்திட, நமக்கு கிடைத்த மிகப்பெரிய களம்தான் மக்கள் நீதி மய்யம். அதன் வாயிலாக மக்களுக்குச் சேவையாற்றிட மய்ய உறவுகள் எழுச்சிக் கொண்டு வருவதை பார்க்கையில், 'மக்கள் நம் பக்கம்; நாம் மக்கள் பக்கம்' என்பது தெளிவாகிறது. உங்கள் மாவட்ட மக்களுக்கு நீங்களும் சேவையாற்ற ஓர் அரிய வாய்ப்பு இது.
கட்சி பணியாற்ற அழைப்பு
மக்கள் நீதி மய்யத்தின் வாயிலாக உங்களுக்கான ஆளுமையை ஆளுங்கட்சியும் பொதுமக்களும் அறிந்து கொள்ள முடியும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்துார், செங்கல்பட்டில் பல்லாவரம், திண்டுக்கல்லில் பழநி, தஞ்சாவூரில் பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட 15 மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு, விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நம்மவர் வழியில் நாமும் மக்களுக்காக பணியாற்றிட கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த விருப்பமுள்ளவர்கள், https://maiamconnect.com/newapplication.php என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.