அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவரை கடத்தி ஒன்றறை கோடி ரூபாய் பணம் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் எஸ். ஈஸ்வரன். அதிமுகவை சேர்ந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் தன்னை கடத்தியதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசில் நேற்று பரபரப்பு புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரில், ‘புஜங்கனூரில் இருந்து நேற்று முன்தினம் மதியம் ஈஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் பவானிசாகரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அங்கிருந்து அவர் மீண்டும் வீடு திரும்புவதற்காக சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலையில் மல்லியம்பட்டி பிரிவு பகுதியில் சென்றபோது அவருக்கு பின்னால் ஒரு கார் வந்து கொண்டு இருந்தது.
மேலும் செய்திகளுக்கு..வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க இது செய்தால் போதும்.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு !
ஈஸ்வரன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை திடீரென வழிமறித்தப்படி அந்த கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து 6 பேர் கொண்ட கும்பல் இறங்கியது. அவர்கள் ஈஸ்வரனின் கண்களை ஒரு துணியால் கட்டினார்கள். பின்னர் அவரை அந்த கும்பல் காரில் ஏற்றி கடத்தி சென்றது. இதையடுத்து மறைவான இடத்துக்கு அழைத்து சென்ற அந்த கும்பல் ஈஸ்வரனை விடுவிக்க ரூ. 3 கோடி கேட்டு மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ரூ. 1½ கோடி பணத்தை கொடுத்து விடுவிக்கப்பட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் புஞ்சபைுளியம்பட்டி போலீசில் புகார் அளித்து உள்ளார்.
கடத்தல்காரர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பேசிய அவர், ‘நான் வங்கிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தேன். அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் எனது கண்களில் துணியை கட்டிவிட்டு கடத்தியது. சுமார் அரை மணிநேரம் காரில் சென்ற பிறகு ஒரு வீட்டில் என்னை அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தினர். அதன்பிறகு இரவில் சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி ஒருவர் என்னிடம் பேசினார்.
மேலும் செய்திகளுக்கு..ஜெய்பீம் பட குழுவினர் மீது வழக்கு பதிவு.. நடிகர் சூர்யாவுக்கு முட்டுக்கட்டை - ராஜாக்கண்ணு உறவினர் வழக்கு
அவர் ரூ. 3 கோடி கொடுத்தால் விட்டுவிடுவதாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வீட்டில் உள்ள பணத்தை எடுத்து கொடுத்துவிடுவதாக நான் கூறினேன். இதையடுத்து மறுநாள் அதிகாலையில் அவர் என்னை வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் இருந்த ரூ. 1½ கோடியை நான் கொடுத்தேன். இதையடுத்து அவர் என்னை வீட்டிலேயே விட்டு சென்றார். கடத்தல்காரர்கள் தாக்கியதில் எனது கால், முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன்’ என்று கூறினார்.
சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் ஈஸ்வரனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னாள் எம். எல். ஏ. ஈஸ்வரனை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி ரூ. 1½ கோடி பறித்த சம்பவம் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”