பாஜகவா? திமுகவா? தீவிர யோசனையில் கோகுல இந்திரா..!

By Selva KathirFirst Published Aug 29, 2019, 10:24 AM IST
Highlights

இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் மாநிலங்களவை எம்.பி. கனவிலும் மண் விழுந்த காரணத்தினால் இனி அதிமுகவில் எதிர்காலம் இல்லை என்கிற முடிவுக்கு கோகுல இந்திரா வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் மாநிலங்களவை எம்.பி. கனவிலும் மண் விழுந்த காரணத்தினால் இனி அதிமுகவில் எதிர்காலம் இல்லை என்கிற முடிவுக்கு கோகுல இந்திரா வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் 2011-2016 கால கட்டத்தில் அமைச்சராக இருந்தவர். ஒரே நேரத்தில் சிவகங்கை மற்றும் மத்திய சென்னை அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தியவர். மேலும் ஜெயலலிதாவின் மனம் கவர்ந்தவர். எவ்வித இறக்கம் வந்தாலும் உடனே சரி செய்து மீண்டும் மேலே எழும்பக் கூடியவர். அதிமுக அமைச்சர்களில் அனைவராலும் அறியப்பட்டவர். 

ஆனால் 2016 தேர்தலில் கோகுல இந்திரா தோல்வி அடைந்தார். இதன் காரணமாக அவரால் அமைச்சராக முடியவில்லை. மேலும் வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவி ஏதாவது அம்மா கொடுப்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால், அதற்குள் ஜெயலலிதா காலமாகிவிட்டார். இதன் பின்னர் சசிகலாவுடன் நெருங்கினார். அவரும் சிறைக்கு சென்றுவிட்டார். பிறகு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஆனார் கோகுல இந்திரா.

22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தென்மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் களம் இறங்க ஆர்வம் காட்டினார். ஆனால் அதிமுக தலைமை கோகுல இந்திராவை கண்டுகொள்ளவில்லை. இதன் பிறகு எப்படியாவது மக்களவை தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிட கோகுல இந்திரா தீவிரமாக களம் இறங்கினார். அந்த தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கும் என்று ஆசையில் இருந்தார்.

 

ஆனால், மாநிலங்களவை எம்பி பதவிக்கான வேட்பாளர் பட்டியலில் கோகுல இந்திராவின் பெயர் கூட பரிசீலிக்கப்படவில்லை. இதன் பிறகு நொந்து போன கோகுல இந்திரா கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார். அதிமுக தலைமை அலுவலகம் பக்கம் மட்டும் அல்லாமல் தலைமைச் செயலகம் பக்கமும் அவரை காண முடியவில்லை. முன்னாள் அமைச்சர் வளர்மதி எங்கு இருந்தாலும் அங்கு கோகுல இந்திராவை பார்க்க முடியும். 

ஆனால் வளர்மதியை கூட கோகுல இந்திரா தற்போது பார்க்கச் செல்லவில்லை என்கிறார்கள். இதற்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்ற நிலையில் அவரை அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஒருவர் விடாமல் அனைவரும் சென்று சந்தித்தனர். சிலர் ஏர்போர்ட்டுக்கே சென்று வழி அனுப்பினர். ஆனால் கோகுல இந்திராவை எங்கும் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் கோகுல இந்திராவுக்கு பாஜக வலை விரிப்பதாக கூறுகிறார்கள்.

 

அதே சமயம் திமுகவிற்கு சென்றால் எப்படி இருக்கும் என்று கோகுல இந்திரா தனது ஆதரவாளர்களிடம் பேசியதாகவும் சொல்கிறார்கள். சிவகங்கையில் பெரிய கருப்பனை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது. ஆனால் மத்திய சென்னையில் தயாநிதிமாறனுடன் இணக்கமாகிவிடலாம் என்றும் கள அரசியலில் பின்னி பெடல் எடுக்கலாம் என்று சிலர் கோகுல இந்திராவுக்கு ஆசையை தூண்டியுள்ளனர். இருந்தாலும் கோகுல இந்திரா என்ன முடிவு எடுப்பார் என்பது போக போகத்தான் தெரியும் என்கிறார்கள். அதே சமயம் கோகுல இந்திராவை திமுக தரப்பில் இருந்து சிலர் அணுகியதாகவும் சொல்கிறார்கள்.

click me!