சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுத்த அதிரடி நீதிபதி !! ஓய்வுக்கும் பிறகு புதிய பதவி வழங்கி அழகு பார்த்த மத்திய அரசு !!

By Selvanayagam PFirst Published Aug 29, 2019, 7:45 AM IST
Highlights

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு அவரது ஓய்வுக்குப் பின்னர் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுனில் கவுர், தீர்ப்பைத் தள்ளிவைத்துக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தான் ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த வழக்கில் அவசர அவசரமாக ஆகஸ்ட் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சுனில் கவுர், ‘இதுபோன்ற கடுமையான பொருளாதாரக் குற்ற வழக்குகளுக்கு முன்ஜாமீன் வழங்குதல் என்ற முறையையே சட்டத்திலிருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற இதுதான் சரியான நேரம். இந்த வழக்கில் ப.சிதம்பரம் கிங்பின் ஆகச் செயல்பட்டிருக்கிறார்’ என்று குறிப்பிட்டு சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை நிராகரித்தார். 

அதாவது சிதம்பரம்  ஒரு சதிக்கும்பலின் தலைவர் போல செயல்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தைக் கைது செய்தனர்,


இதனைத் தொடர்ந்து நீதிபதி சுனில் கவுர், ஆகஸ்ட் 23ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவருக்குச் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

சுனில் கவுர்தான் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பில் விசாரிப்பதற்கு இருந்த முட்டுக்கட்டைகளை உடைத்து தனது உத்தரவின் மூலம் வழி ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதும், மத்தியப் பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதூல் பூரிக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் முன்ஜாமீன் மறுத்து, கடந்த வாரம் உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!