ஜாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டுபிடித்து, முளையிலேயே அகற்றிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் +2 படித்து வரும் மாணவன் சின்னத்துரையை சக மாணவர்களில் சிலர் கொடூர ஆயுதங்களால் தாக்கி உள்ளதாகவும், காப்பாற்ற வந்த அவரது சகோதரியையும் அம்மாணவர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த 2 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். மாணவர்களின் மத்தியில் நன்னெறி, நீதி போதனை வகுப்புகளை நடத்தி மாணவ சமுதாயம் சகோதரத்துவத்துடன் நடப்பதற்கு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும். அதன்மூலம் ஜாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டுபிடித்து, முளையிலேயே அகற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!