’சின்னமும் போச்சு.. மானமும் போச்சு...’ புலியாய் பாவித்து எலியாய் தவிக்கும் ’பரிதாப’ பிரேமலதா..!

By Thiraviaraj RMFirst Published Mar 9, 2019, 2:15 PM IST
Highlights

 தேமுதிக முரசு சின்னத்தில் போட்டியிடமுடியாத நிலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

திமுக கதவடைத்து விட்டு விட்டதால் வேறு வழியே இல்லாமல் 4 தொகுதிகளை பெற்றுக்கொள்ள தேமுதிக சம்மதித்து இறங்கி வந்துள்ளது. ஆனாலும், தேமுதிக முரசு சின்னத்தில் போட்டியிடமுடியாத நிலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

பொதுவாக ஒரு கட்சி தனது சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் 5 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் தொடர்பாக ஆணையம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முந்தைய சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்கும் 2 தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் 6 சதவீத வாக்கு மற்றும் குறைந்தபட்சம் ஒருவர் அக்கட்சியில் இருந்து மக்களவை உறுப்பினர் ஆகியிருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், சட்டப்பேரவையில் 3 சதவீத உறுப்பினர்கள் அல்லது குறைந்தபட்சம் 3 உறுப்பினர்கள் இவற்றில் எது அதிகமோ அந்த எண்ணிக்கை எடுத்துக் கொள்ளப்படும். மக்களவை எனில், அந்த மாநிலத்தின் மொத்த உறுப்பினர்களில் 25 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் உறுப்பினரை பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த விதிகளில் ஒன்றில் கூட தகுதியை பெறவில்லை தேமுதிக. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 104 தொகுதிகளில் போட்டியிட்டு 103 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத தேமுதிக 2.3 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

 அதேபோல் 2014 மக்களவை தேர்தலில் 14 தொகுதிகளில் கள்மிறங்கி 11 தொகுதிகளில் டெபாசிட் இழந்து 5.19 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. மக்களவைக்கு ஒரு உறுப்பினர்கள் கூடத் தேறவில்லை. ஆக மொத்தத்தில் தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளில் தேமுதிக தகுதி பெறாது. முரசு சின்னத்தில் போட்டியிட வேண்டுமானால் தேர்தல் ஆணையத்தை நாடி பெற்றுக் கொள்ளலாம். பேரம் பேசியது அம்பலமானது, முரசு சின்னத்தில் போட்டியிட முடியாதது. தேமுதிகவின் முக்கியத்துவம் குறைந்து போனது, இவையெல்லாம் பிரேமலதா கொதிப்பு, ஆத்திரம், விரக்தி, சோகம், ஆற்றாமை, தவிப்பு என்று எல்லா உணர்வுகளும் கலந்து தவித்து வருகிறார்.

அதிமுக ஒதுக்க முன் வந்துள்ள 4 சீட்டுகளை பெற்றுக்கொண்டாலும் தேமுதிகவுக்கு மேலும் சில சிக்கல்கள் உள்ளன. எந்த தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும்? அவை சாதகமான தொகுதிகளாக இருக்குமா? தற்போதைய நிலையில் ஏற்கெனவே கொடுக்க வாக்குறுதி அளித்ததை கொடுப்பார்களா? போட்டியிடப்போவது கொட்டுமுரசு சின்னத்திலா? இரட்டை இலை சின்னத்திலா? இவ்வளவு அவமானங்களை தாங்கிய பிறகும் அதிமுக கூட்டணியில் மரியாதை கிடைக்குமா? வடமாவட்டங்களில் பாமக கைகொடுக்குமா? அல்லது பழைய பகையை வைத்து காலை வாரிவிடுமா? 

என்றெல்லாம் தவித்து வருகிறது தேமுதிக தலைமை. செய்தியாளர்களிடம் நாகரீகம் இன்றி தன்னை புலியாய் பாவித்து பொங்கி எழுந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, இவற்றையெல்லாம் உள்ளுக்குள் நினைத்து எலியாய் நான்கு சுவற்றுக்குள் நடந்து கொண்டே நொந்து புலம்பித்தவித்து வருகிறார்

click me!