4 வருடம் தேவையில்லை.. இப்போவே மக்கள் கடுப்பாயிட்டாங்க.. தெறிக்கவிட்ட ஓபிஎஸ் !!

By Raghupati RFirst Published Feb 16, 2022, 6:19 AM IST
Highlights

‘ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதங்களில் மக்கள் மத்தியில் வெறுப்பை பெற்றுள்ள நிலை இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை’ என்று திமுக ஆட்சியை மிகவும் காட்டமாக விமர்சித்து இருக்கிறார் ஓபிஎஸ்.

மதுரை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ‘அதிமுகவை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத தமிழ்நாட்டில் அதிமுக-வை எக்கு கோட்டையாக உருவாக்கியவர்கள் எம்ஜிஆர்-யாரும் ஜெயலலிதாவும் தான்.

100க்கு 100 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா. தமிழகம் நெல் உற்பத்தியில் கடந்த 5 ஆண்டுகளாக முதலிடம் வகித்தது அதிமுக ஆட்சியில் தான். யாராலும் குறை சொல்ல முடியாத ஆட்சியை செய்தவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா தான். 

திமுக சட்டமன்ற தேர்தலில் பொய்யை சொல்லி மக்களை நம்ப வைத்து குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார்கள். நீட் தேர்வு ரத்து செய்வதாக முக. ஸ்டாலின் சொன்னார். ஜனாதிபதிதான் 10 மாதங்களாக கையெழுத்து போட்டு கொண்டிருக்கிறார். ஆனால் இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.

மகளிருக்கு 1000 ரூபாய் தருவதாக சொல்லி ஏமாற்றி விட்டார்கள். நகைகடன் தள்ளுபடி விவகாரத்தில், 35 லட்சம் மக்களை ஏமாற்றி விட்டது திமுக அரசு. பொங்கல் தொகுப்பை முறையாக வழங்காததால் முதல்வர் வெளியே கூட்டம் போட்டு பேச முடியவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதிலும், நிதியை வழங்காமல், தரமற்ற பொருட்களை வழங்கியும் ஏமாற்றி விட்டார்கள்.

இதையெல்லாம் பார்த்து இன்னும் 4 ஆண்டுகள் மக்கள் பொறுக்க மாட்டார்கள். உறுதியாக தமிழகத்தில் மறுமலர்ச்சியும், புரட்சியும் ஏற்படும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழக மக்கள் ஓயமாட்டார்கள். 9 மாதங்களாக மக்களுக்கு எதுவும் திமுக செய்யவில்லை, எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

ஆட்சியை எடை போட்டு மக்கள் தீர்ப்பு வழங்கும் தேர்தலாக வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைய உள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற 10 மாதங்களில் மக்கள் மத்தியில் வெறுப்பை பெற்றுள்ள நிலை இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி வாகை சூடும் என்ற முடிவை மக்கள் எடுத்துள்ளார்கள். நிச்சயம் மதுரை மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும்’ என்று பேசினார்.

click me!