
எடப்பாடி பழனிசாமியை இனி பாஜக பழனிசாமி என்றுதான் அழைக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி காணொலி காட்சி மூலம் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம் மாநகராட்சி உள்பட தஞ்சாவூரில் உள்ள நகராட்சி, பேரூராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "தஞ்சையில் மாமன்னர் ராஜராஜனின் சிலையை வைத்தவர் கருணாநிதிதான். அதேபோல ராஜராஜ சோழனின் ஆயிரமாவது விழாவை கொண்டாடியதும் கருணாநிதிதான். திமுக ஆட்சியில்தான் கும்பகோணம் மகாமக திருவிழா நடைபெற்றது. அதை சிறப்பாக நடத்தியது திமுக ஆட்சிதான். மேட்டூரில் இருந்து ஜீன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்து விட்டு முறையாக தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு, தண்ணீர் கடைமடை பகுதிவரை செல்வதை உறுதி செய்ததும் திமுக ஆட்சிதான்.
பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஒரு கோடியில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு மேம்படுத்தப்படும். வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 53.50 கோடி ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினைக்காக நீண்ட நெடிய போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்ல, அதன் இறுதித் தீர்ப்பு 2007-ஆம் ஆண்டு பெற்றுக் கொடுத்தது திமுக அரசுதான். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை காத்த இயக்கம்தான் திராவிட இயக்கம். தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பேசிவருகிறார். இனி எடப்பாடி பழனிச்சாமியை பா.ஜ.க பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும். ஏனென்றால், பா.ஜ.க வாய்ஸில் அவர் மிமிக்ரி செய்துவருகிறார்.
நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தது திமுக. ஆனால், அந்தச் சட்டத்தை உழவர்களுக்கான சட்டம் எனக் கூறியவர் எடப்பாடி பழனிச்சாமி. அதை எதிர்த்து போராடியவர்களை தரகர்கள் எனக் கூறியவர் அவர்தான். மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றதன் மூலம் விவசாயிகள் தலையில் துண்டு போட நினைத்தவருக்கு, துண்டு தன் தலையில் விழுந்தது. வேளாண் சட்டத்துக்கு ஆதரவு தந்ததால், விவசாயிகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். கொரோனா விதிமுறை காரணமாகத்தான் நான் காணொலியில் பிரச்சாரம் செய்கிறேன். ஆனால் ,அதை பழனிச்சாமி ஏளனம் செய்கிறார். நான் நேரடியாக பிரச்சாரம் செய்தால் கூடும் கூட்டத்தை பார்த்து என்ன சொல்வார்கள்? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தஞ்சை மாவட்டத்துக்கு நான் நேரடியாக வருவேன், வெற்றி விழாவில் பங்கேற்பேன்” என்று ஸ்டாலின் பேசினார்.