
சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக - பாஜக 4ம் கட்ட பேச்சுவார்த்தை தனியார் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த 4ம் கட்ட பேச்சுவார்த்தையாவது இறுதி வடிவம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாள்களே இருக்கும் நிலையில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுகவால், பாஜக, தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலையில் எம்.ஆர்.சி. நகர் லீலாபேலஸ் ஹோட்டலில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம், பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், சி.டி.ரவி, எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும், தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த முடிவும் எட்டப்பவில்லை.
இந்நிலையில், 4ம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல், பாஜக சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த 4ம் கட்ட பேச்சுவார்த்தையாவது இறுதி வடிவம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜக தரப்பில் 40-க்கும் அதிகமான தொகுதிகளின் பட்டியலை அளித்து இதில் தொகுதிகளை ஒதுக்குமாறு கோரியுள்ளது. இதில், 90 சதவீத தொகுதிகள் அதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள். இதனால் தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.