தாத்தா இடம் பேரனுக்கு, திருவாரூர் தொகுதி உதயநிதிக்கு!

First Published Aug 10, 2018, 11:51 AM IST
Highlights

திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து.  அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில்  அவரது பேரனும் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தமிழக அரசியலில் இரண்டு நூற்றாண்டுகளாக ராஜங்கம் செய்தவர், தமிழ்நாட்டின் முன்னேற்றதிற்காக பல திட்டங்களை செயல்படுத்தியவர், தமிழ் அன்னையின் தவப்புதல்வன் என எண்ணிலடங்கா புகழுக்கு சொந்தக்காரர் கலைஞர் கருணாநிதி நேற்று முந்தினம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
நேற்று அவரது பூத உடல் மெரினாவில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. 94 வயதான இந்த மூத்த அரசியல் தலைவருக்கு, திரைத்துறை பிரபலத்திற்கு, அஞ்சலி செலுத்த நாடெங்கிலும் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சட்டப்பேரவை உறுப்பினர் யாராவது மறைந்தால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட வேண்டும். அதன்படி, கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தமிழக சட்டப்பேரவைச் செயலகம் விவரங்களை அனுப்ப உள்ளது. இதையடுத்து, திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கும் என தெரிகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சில நாட்களுக்கு முன்பு காலமானார். அதனால், அந்த தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலியாக அறிவிக்கப்பட்ட தொகுதிக்கு 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, திருப்பரங்குன்றம்,திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்  விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234. இதில் ஏற்கெனவே, முதல்வருக்கு எதிராக மனு அளித்ததால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அந்த தொகுதிகள் அனைத்தும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற தடை இருப்பதால், 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை, இந்நிலையில் தற்போது திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது.

இந்நிலையில்,    தாத்தா சொத்து பேரனுக்கு என சொல்வார்கள், அப்படி காலம் காலமாக கடைபிடித்துவரும் இந்த பழக்கமானது, தற்போது நடக்கப்போகிறது.  அதாவது கருணாநிதி மறைவை அடுத்து அவர் உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதியை, அவரது பேரனான  உதயநிதியை இடைத்தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே, உதயநிதியை களமிறக்க பணிகளை ஆரம்பித்துள்ளனர். திமுகவில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில்  உதயநிதிக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கபட்டது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து, அவர் பிறந்த திருவாரூர் தொகுதியில் உதயநிதியை  களமிறக்க திட்டமிட்டுள்ள ஸ்டாலின் அதற்கான பணிகளை அன்பில் மகேஷ் மூலம் முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

click me!