அரசுப்பள்ளிகளை காப்பாற்ற செங்கோட்டையனின் அடுத்த அதிரடி! 200 பள்ளிகளின் தரத்தை உயர்த்தி உத்தரவு!

By vinoth kumarFirst Published Aug 10, 2018, 11:46 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களை தக்க வைத்துக் கொள்ளவும் செங்கோட்டையன் அதிரடி திட்டத்திற்கு ஓ.கே. சொல்லியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களை தக்க வைத்துக் கொள்ளவும் செங்கோட்டையன் அதிரடி திட்டத்திற்கு ஓ.கே. சொல்லியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை அரசு சார்பில் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளிகள் அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. 5ம் வகுப்பு வரை சொல்லிக் கொடுக்கப்படும் பள்ளிகள் ஆரம்ப பள்ளிகள் என்றும், 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகள் என்றும் அழைக்கப்படும். பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் என்றும், 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகள் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் உயர் நிலைப்பள்ளிகளாக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். அதாவது ஒரு மாணவன் ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்துவிட்டால் 12ம் வகுப்பு வரை அதே பள்ளியில் தொடர வேண்டும். இதற்கு அனைத்து பள்ளிகளும் உயர் நிலைப்பள்ளிகளாக இருக்க வேண்டும். அரசு ஆரம்ப பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படித்துவிட்டு மாணவர்கள் நடுநிலைப்பள்ளிகளையோ, மேல்நிலைப்பள்ளிகளையோ, உயர் நிலைப்பள்ளிகளையோ தேடிச் செல்ல வேண்டும். இவ்வாறாக மாணவர்கள் பள்ளி மாறிச் செல்லும் போது பெரும்பாலும் அரசுப் பள்ளிகளுக்கு பதில் தனியார் பள்ளிகளுக்கு சென்றுவிடுகின்றனர். 

இதனால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை விழுக்காடு குறைகிறது. இந்த நிலையை மாற்ற தமிழகம் முழுவதும் உள்ள 100 நடுநிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும், 100 மேல் நிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும் மாற்ற பட்ஜெட்டில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்புதல் தற்போது அரசாணை வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அதாவது தமிகத்தில் உள்ள 100 நடுநிலைப்பள்ளிகள் இனி மேல்நிலைப்பள்ளிகளாகிவிடும். அதாவது அங்கு எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை. அங்கேயே பத்தாம் வகுப்பு வரை பயிலலாம். இதே போல் 100 மேல்நிலைப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

 இதன் மூலம் அந்த பள்ளிகளில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளியில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைவது கணிசமான அளவில் தடுக்கப்படும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை இந்த கல்வி ஆண்டே செயல்படுத்திய செங்கோட்டையனுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

click me!