
இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற இருந்த நிலையில், விசாரணையை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாக செயல்பட்ட சசிகலா தரப்பை ஓரங்கட்டி விட்டு முதல்வர் பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது.
இதையடுத்து சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. சின்னம் ஒதுக்குவது தொடர்பான விசாரணையில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தினகரன் தரப்பு கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றது.
இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அதனடிப்படையில், இன்று தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற இருந்தது. அதற்கான கூடுதல் ஆவணங்களும் பிரமாணப் பத்திரங்களும் முதல்வர் பழனிசாமி அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் தினகரன் தரப்பில் எந்த ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை.
ஆவணங்களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்ற தினகரனின் கோரிக்கையை தேர்தல் ஆணையமும் உயர்நீதிமன்ற மதுரை கிளையும் நிராகரித்து விட்டன.
இந்நிலையில், இன்று மதியம் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை நடைபெற உள்ள நிலையில், இந்த விசாரணையை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இரட்டை இலை விசாரணை தேர்தல் ஆணையத்தில் மதியம் நடைபெற உள்ள நிலையில், தினகரன் தாக்கல் செய்த மனுவும் உச்சநீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.