புயலென புரிய வைப்போம்...! அதிமுக எம்.பி. மைத்ரேயனின் குண்டக்க மண்டக்க பதிவு!

By Asianet TamilFirst Published Mar 19, 2019, 8:25 AM IST
Highlights

அதிமுக சார்பில் போட்டியிட சீட்டு மறுக்கப்பட்ட அதிமுக எம்.பி. மைத்ரேயன், தனது ஆதங்கத்தை முக நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
 

அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் மைத்ரேயன். அதிமுக வரலாற்றில் தொடர்ந்து மூன்று முறை எம்.பி.யாக இருந்தவர். அவருடைய தற்போதைய பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவர் இருக்கிறார். இருந்தபோதும், அதற்காகக் காத்திராமல் மக்களவை தேர்தலில் போட்டியிட மைத்ரேயன் ஆர்வம் காட்டினார். மத்திய சென்னை, தென் சென்னையில் போட்டியிட விருப்ப மனுக்களை வழங்கியிருந்தார்.

ஆனால், தென் சென்னையில் மட்டுமே அதிமுக போட்டியிடும் நிலையில், அந்தத் தொகுதியின் வேட்பாளராக அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். தென் சென்னையில் போட்டியிட மைத்ரேயனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு நிலைத்தகவல் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய முக நூல் பதிவு இதுதான். “இன்று வீட்டில் அம்பாரமாக குவிந்துள்ள புத்தகங்கள், பத்திரிகை குறிப்புகளை சரி செய்து அடுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பழைய இதழில் கவிஞர் மு.மேத்தா அவர்களின் கவிதை வரிகளைப் படிக்க நேர்ந்தது. 
"என் கால்களில் சற்று வலி ஏற்படும் போது நான் சிறிது இளைப்பாறுகிறேன்.நான் இளைப்பாறுவது ஓய்வெடுப்பதற்குத் தானே ஒழிய ஓய்ந்து போவதற்கு அல்ல."
" காத்திருக்கும் வரை நம் பெயர் காற்று என்றே இருக்கட்டும். புறப்பட்டு விட்டால் புயலெனப் புரிய வைப்போம்".
எவ்வளவு பொருள் பொதிந்த யதார்த்தமான வரிகள்!” என்று மைத்ரேயன் தெரிவித்திருக்கிறார்.
ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது முதல் ஆளாக அவருக்கு தோள் கொடுத்தவர் மைத்ரேயன். ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பிறகு, ‘அணிகள் இணைந்தன.. மனங்கள்’ என்று கேள்வி கேட்டு அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். இதேபோல அதிமுக தேர்தல் பணிக்குழுக்களில் எதிலும் சேர்க்கப்படாமல் மைத்ரேயன் புறக்கணிக்கப்பட்டதால், தனது அதிருப்தியையும் அவர் அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.  

click me!