பூந்தமல்லியைத் திணறடிக்கும் கூட்டணி கால்குலேஷன்! திமுக - அதிமுகவுக்கு கூட்டணி கட்சி ஓட்டுகள் உதவுமா?

By Asianet TamilFirst Published Mar 19, 2019, 7:55 AM IST
Highlights

சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் பூந்தமல்லி தொகுதியில் கூட்டணி கணக்குகள் வெற்றி வாய்ப்பை பெற்று தருமா என்ற எதிர்பார்ப்பில் திமுக, அதிமுக கட்சிகள் இருக்கின்றன.
 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பூந்தமல்லியும் ஒன்று. சென்னையை ஒட்டியுள்ள தொகுதி இது. 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியை திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் தலா 5 முறை கைப்பற்றியிருக்கின்றன. குறிப்பாக கடந்த 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
 கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இங்கே போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏழுமலை 1,03,952 வாக்குகளைப் பெற்றார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 92,189 வாக்குகளைப் பெற்று 11,763 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இத்தொகுதியில் எந்தக் கட்சி வெல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எம்.எல்.ஏ. பதவியை இழந்த ஏழுமலை அமமுக சார்பில் இங்கே மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கிருஷ்ணசாமியும் அதிமுக சார்பில் வைத்தியநாதனும் போட்டியிடுகின்றன.
இந்தத் தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற கேள்வி திமுக, அதிமுக, அமமுக மத்தியில் நிலவிவருகிறது. அமமுகவை பொறுத்தவரை 18 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்திவருகிறது. அதிமுக ஓட்டுகளையும் கட்சி சாரா வாக்களார்களின் வாக்குகளையும் பெற தீவிர கவனம் செலுத்திவருகிறது. எனவே ஆர்.கே. நகரைபோல பூந்தமல்லியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அமமுகவினர். 
ஆனால், திமுக - அதிமுகவோ கடந்த முறை பெற்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றி வாய்ப்பைப் பற்றி ஆராய்ந்துவருகின்றன. கடந்த முறை தேமுதிக, சிபிஎம், சிபிஐ, தமாகா ஆதரவுடன்  போட்டியிட்ட மதிமுக 15,051 வாக்குகளைப் பெற்றது. இந்த வாக்குகளில் 10 ஆயிரம் வாக்குகள் கிடைத்தாலே வெற்றி பெறலாம் என்று திமுக கணக்கு போடுகிறது. இந்தத் தொகுதியில் தனித்து போட்டியிட்டு பாமக 15,827 வாக்குகளைப் பெற்றது. இந்த வாக்குகள் தினகரன் வாக்கு பிரிப்பை சரி செய்துவிடும் என்ற நம்பிக்கையில் அதிமுக உள்ளது. 
ஓட்டு பிரிப்புகளும் கூட்டணி ஓட்டுகள் சேர்த்தல்களும் இந்தத் தொகுதியில் தேர்தல் முடிவை நிர்ணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப திமுகவும் அதிமுகவும் கடந்த தேர்தல் கணக்கை வைத்து கூட்டி கழித்து பார்த்துவருகின்றன. எனவே பூந்தமல்லியில் இடைத்தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என்பதே கள நிலவரம். 

click me!