30 வருடமாக பார்த்து பார்த்து கட்டிய சசிகலா கோட்டையின் கடைசி கல்லும் அகற்றப்படுகிறது... பத்திரத்தை திருத்த மா.செ க்கள் கூட்டம்!

First Published Apr 24, 2017, 2:54 PM IST
Highlights
ADMK district secretary meeting to be held today


முப்பது வருடமாக பார்த்து பார்த்து கவனமாக கட்டிய கோட்டை, தம் கண் முன்னாலேயே சரிவதை பார்க்கும் அவலம் சசிகலாவுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு பின்னால், ஆட்சியும், கட்சியும் தம் குடும்பத்தை விட்டு போய்விடக்கூடாது, என்று அவர் உருவாக்கிய வலுவான கோட்டை அது.

ஆனால் கோட்டையின் எந்த கல்லை உருவினால், ஒட்டு மொத்த கோட்டையையும் தகர்க்க முடியும் என்பதை சிலர் அறிந்துதானே வைத்துள்ளனர்.

அப்படித்துதான், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பொது செயலாளர் பதவியை பிடித்து, முதல்வர் நாற்காலியை நெருங்கும்போது, சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பில், பெங்களூரு சிறைக்கு சென்றார் சசிகலா.

ஆனாலும், தனது பேச்சை மீறாத எடப்பாடி முதல்வர், கட்சி தமது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விலகாமல் இருக்க, தினகரன் துணை பொது செயலாளர் என்று முட்டு கொடுத்தார் சசிகலா.

ஆனாலும், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தம், இரட்டை இல்லை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த புகாரில் தினகரன் மீது வழக்கு பதிவு என முதல் முட்டு தகர்க்கப்பட்டது.

அடுத்து, சசிகலா மற்றும் தினகரன் முன்னால், கை கட்டி, வாய் பொத்தி நின்ற அமைச்சர்கள் வாயாலேயே, தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கடைசியாக, தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னத்தை தம்வச படுத்த, கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கப்பட்டதில், திருத்தம் செய்வதற்காக, நாளை முதல் மூன்று நாட்களுக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

அதனால், அதிமுக என்ற புதையலை யாரும் கைப்பற்றி விடாமல் இருப்பதற்காக, சசிகலா கடந்த 30 வருடமாக திட்டமிட்டு மிகவும் கவனமாக உருவாக்கிய அந்த கோட்டையில் ஓட்டை மட்டும் விழவில்லை.

ஒட்டு மொத்தமாக சிதைந்து சின்னா பின்னமாகப்போகிறது. இதை தமது கண்களாலேயே காணும் துரதிர்ஷ்டத்தையும் அவர் சந்தித்து கொண்டிருக்கிறார்.

இனி எக்காரணம் கொண்டும், அந்த கோட்டை எழுந்து விட கூடாது என்று, அதை தரைமட்டமாக்கும் பணியும் தற்போது, கவனமாக நடைபெற்று வருகிறது.

கட்சி என்பது அனைவருக்கும் பொதுவான அமைப்பு. அதில் முக்கிய பங்கு வகிப்பவர்களுக்கு வேண்டுமானால் சில சிறப்பு உரிமைகள் இருக்கலாம்.

ஆனால் அந்த சிறப்பு உரிமை அனைத்தும், தமது உறவுகளுக்கும், சமூகத்திற்கும்தான் இருக்க வேண்டும், அப்போதுதான் தமக்கு பாதுகாப்பு என்ற அவரது எண்ணமே, இத்தனை துயரத்திற்கும் காரணமாக அமைந்து விட்டது.

சசிகலா, தமக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து சமூகங்களிலும் தமக்கென ஒரு ஆதரவு வட்டத்தை கட்டமைத்திருந்தால், இந்நேரம் அவர் முதல்வராக அமர்ந்திருப்பார்.

எண்ணமும், நோக்கமும் தெளிவாக இல்லாமல் எந்த காரியத்தை செய்தாலும், அது தமக்கு எதிராகவே முடியும் என்பதற்கு, சசிகலாவே முன் உதாரணம் ஆகிவிட்டார்.

click me!