சுயநலவாதிகளை தவிர சசிகலாவை அதிமுக தொண்டர்கள் எல்லோரும் ஏற்பார்கள்...திவாகரன் தாறுமாறு கணிப்பு!

By Asianet TamilFirst Published Jun 11, 2020, 8:49 PM IST
Highlights

கடந்த காலங்களில் அதிமுகவுக்கு இக்கட்டான சூழல் வந்துள்ளன. அப்போதெல்லாம் நானும் சசிகலாவும் சேர்ந்து நிலைமையை சீர்படுத்தியிருக்கிறோம். எனவே அதிமுகவுக்கும் மன்னார்குடிக்கும் இடையே அசைக்க முடியாத பிணைப்பு உள்ளது. இந்தப் பிணைப்பை யாராலும் தடுக்க முடியாது. 

சில சுயநல அரசியல்வாதிகள் தவிர அதிமுக தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை ஏற்றுக்கொள்வார்கள் என்று அவருடைய சகோதரரும் அண்ணா திராவிட கழகத்தின் பொதுச்செயலாளருமான  திவாகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் சகோதரர் திவாகரனை பொதுச்செயலாளராகக் கொண்ட அண்ணா திராவிடர் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா மன்னார்குடியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார் திவாகரன். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். “கொரோனா வைரஸ் காரணம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிக்கும் முறையை கைவிட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதற்கு தேவைப்படும் கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவழிக்கப்பட்ட  நிதி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


சசிகலா அடுத்த ஆண்டு விடுதலையாவார். அவர் சிறையிலிருந்து வெளியே வரும்போது அவருக்கான அரசியல் தளம் தமிழகத்தில் இருக்குமா என்பது சந்தேகம்தான். அவருடைய சகோதரன் என்றம் முறையில் அவருடைய நலனுக்காக நான் பிரார்த்தனை செய்து வருகிறேன். ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு வந்தது. ஆனால், அவரை சுற்றி நின்ற ஒரு கூட்டம் அதைத் தடுத்துவிட்டது. சாலையில் சென்றவர்களை எல்லாம் பெரிய பதவிகளில் அமர வைத்தவர் சசிகலா. சில சுயநல அரசியல்வாதிகள் தவிர அதிமுக தொண்டர்கள் அனைவரும் சசிகலாவை ஏற்றுக்கொள்வார்கள்.


கடந்த காலங்களில் அதிமுகவுக்கு இக்கட்டான சூழல் வந்துள்ளன. அப்போதெல்லாம் நானும் சசிகலாவும் சேர்ந்து நிலைமையை சீர்படுத்தியிருக்கிறோம். எனவே அதிமுகவுக்கும் மன்னார்குடிக்கும் இடையே அசைக்க முடியாத பிணைப்பு உள்ளது. இந்தப் பிணைப்பை யாராலும் தடுக்க முடியாது. 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் சபாநாயகரிடம் அறிவுறுத்தியது. ஆனால், அவர் முடிவெடுக்காமல் இருந்தது தவறான செயல். போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் நீதிமன்றம் அறிவித்தது போல தீபா, தீபக் ஆகிய இருவருக்குமே சொந்தம்.” என்று தெரிவித்தார்.

click me!