
பெங்களூர் பத்திரிக்கையாளர் கொலை குறித்து மோடிக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து கூறியதற்கு தேசிய விருதுகளை தாராளமாக திருப்பி தரலாம் என எஸ்வி சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
லங்கேஷ் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் கௌரி லங்கேஷ். இவர் தீவிர இடது சாரி சிந்தனையாளர். மேலும், ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை தீவிரமாக துணிச்சலாக எதிர்த்ததோடு மட்டுமின்றி பத்திரிக்கைக்கைகளிலும் எழுதி வந்தார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து பெங்களூரில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசினார்.
அப்போது, கௌரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாகவும் இதுபோன்ற விஷயத்தில் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகர் என்றும் தெரிவித்தார்.
இதற்காக தனக்கு வழங்கப்பட்ட 5 தேசிய விருதுகளை திருப்பித்தர தயங்க மாட்டேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்வி சேகர் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், நடிகர் பிரகாஷ் ராஜ் வாங்கிய 5 தேசிய விருதுகளையும் தாராளமாக திருப்பி தரலாம் எனவும், அவரது விருதுகளால் இந்தியா சீனாவுடன் இணைய போகிறதா என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.