
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஸ்டாலினுக்கு என்ன காட்டமோ தெரியவில்லை. அவரை வார்த்தைகளால் வகுந்தெடுத்திருக்கிறார்.
நீலகிரி மாவட்ட முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர் “தமிழகத்தை டெங்கு காய்ச்சல் புரட்டி எடுத்து வருகிறது. எத்தனையோ இன்னுயிர்களை இழந்துவிட்டோம். ஆனால் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதைப்பற்றி எல்லாம் அக்கறையில்லை.
அவர் சாதாரண விஜயபாஸ்கர் இல்லை ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்.’ சென்னை சிட்டியிலும், அதன் வெளிப்புறங்களிலும் சட்டத்தை மீறி, குட்கா விற்பனை நடந்ததை நாம் கண்டு பிடித்து சட்டமன்றம் வரை விவகாரத்தை கிளப்பினோம். ஆனால் அமைச்சரோ குட்கா கமிஷனில் அள்ளிக்குவித்தார். அவர் மட்டுமா? பல அரசு அதிகாரிகளும்தான்.
விஜயபாஸ்கர் ஒரு டாக்டர். அதுவும் சாதாரண டாக்டரில்லை, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். நாமெல்லாம் வீட்டில் பால் கணக்கு எழுதி வைப்போம். ஆனால் இவரோ முதல்வர் முதல் கிளை செயலாளர் வரை யார் யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்று கெட்டியான டைரியில் கச்சிதமாக எழுதி வைத்திருந்து வரவு செலவு பார்த்தவர். இதை நான் சொல்லவில்லை, இவரது வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரிகளே சொல்கிறார்கள்.
பன்னீர் தர்மயுத்தம் எனும் நாடகத்தை நடத்தியபோது இவரும், பன்னீரும் மாறி மாறி கேவலமாக விமர்சித்துக் கொண்டார்கள். ஆனால் இன்று ஒரே அமைச்சரவையில் கோலோச்சுகிறார்கள். எல்லாம் கொள்ளையடிப்பதற்காகத்தான். அதற்குத்தான் இந்த ஒற்றுமை, வேறென்ன?
குட்கா விவகாரத்தில் நடந்த முறைகேடுகளுக்கும், அத்துமீறல்களுக்கும் நம்மிடம் வலுவான ஆதாரமிருக்கிறது. நம் ஆட்சி வந்துவுடன் இவர்கள் மீது நடவடிக்கை பாயும்.” என்று கர்ஜித்திருக்கிறார்.
சொந்த கட்சி சீனியர் பன்னீர்செல்வத்தையே சில மாதங்களுக்கு முன் பதிலடி விமர்சனங்களில் புரட்டியெடுத்த விஜயபாஸ்கர், ஸ்டாலினுக்கு என்ன பதில் தரப்போகிறாரோ?!