
உத்திரபிரதேஷ சுற்றுலா தல பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கியதற்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் யமுனை ஆற்றின் கரையில் தாஜ்மகால் அமைந்துள்ளது. இது சர்வதேச அளவில் 7-வது உலக அதிசயமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலின் பெரும் பகுதி பொதுமக்களுக்காக இன்றளவும் திறந்துவிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
உலகிலேயே காதலுக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய மாளிகை என்ற சிறப்பு தாஜ்மகாலுக்கு உண்டு. ஆனால், தாஜ்மகால் குறித்து பல்வேறு கருத்துகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறப்பட்டு வருகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில், தாஜ்மாகால் பகுதியில் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
தாஜ்மகாலை பார்ப்பதற்காக வெளி நாடுகளில் இருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். வெளிநாட்டினர் மட்டுமல்ல; இந்தியாவில் இருந்தும் மக்கள் தாஜ்மகாலைக் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாஜ்மகால் சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், உத்திரபிரதேஷ சுற்றுலா தல பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கியது கண்டனத்திற்குறியது எனவும், மீண்டும் சுற்றுலா தள பட்டியலில் தாஜ்மஹாலை சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.