
எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் நவோதயா பள்ளிக்க அனுமதி அளிக்காத நிலையில், தற்போதைய எடப்பாடி அரசு அதனை அனுமதிக்க முயற்சிப்பதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மதிமுக பொது செயலாளர் வைகோ, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
சென்னை காமராஜர் அரங்கில், நவம்பர் மாதம் 20 ஆம் தேதி மதிமுக சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில், தேசிய அளவில் எதிர்கட்சி தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களை அழைக்க உள்ளோம்.
தமிழக விவசாயிகளை, மக்களை பாதிக்கின்ற திட்டங்களை எதிர்த்து தீர்ப்பாயத்தில் வாதாடி வருகிறோம். ஆனால், தீர்ப்பாயத்தையே கலைத்துவிடும் முடிவுக்கு அரசு வந்துள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை.
மத்திய அரசின் அச்சகத்தை விற்பனை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதனால், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விகுறியாகி உள்ளது. இந்த அச்சகத்தை வடமாநிலத்துக்கு மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
எந்த நிபந்தனையும் இன்றி கூட்டுறவு கடனை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; விவசாய இடு பொருட்களை 100 சதவிகித மானியத்தில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் நவோதயா பள்ளியை திறக்க அனுமதி அளிக்கவில்லை. தற்போது எடப்பாடி அரசு அனுமதிக்க முயற்சிக்கிறது. இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.