
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களை டிடிவி தினகரன் குறை கூறுவதா எனவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் விசாரணை கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒபிஎஸ்சுடன் கைகோர்த்து டிடிவிக்கு எதிராக சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி அறிவித்ததால் அவருக்கு எதிராக டிடிவி எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர்.
இதனால் கட்சி தாவல் சட்டப்படி சபாநாயகர் தனபால் அவர்களில் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க கோரி டிடிவி தரப்பிலும் ஸ்டாலின் தரப்பிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்த தீர்ப்பு நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
இதனிடையே தமிழக அரசு ஜெ மரணம் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமனம் செய்து உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து டிடிவி தினகரன் ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பதிலாக தற்போது பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்திருக்கலாம் என கூறியதோடு அமைச்சர்களையும் குறை கூறி வந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களை டிடிவி தினகரன் குறை கூறுவதை ஏற்க முடியாது எனவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் விசாரணை கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
ஒரு நீதிமன்ற அமைப்பு உண்மையை வெளிக் கொண்டு வர யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.