தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்ட 3 தாசில்தார்கள் மீது நடவடிக்கை.. தமிழக அரசு ஆக்ஷன்

By Ezhilarasan Babu  |  First Published Oct 21, 2022, 10:19 AM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போது துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் மூன்று தாசில்தார்களுக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் அவர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது


தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போது துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் மூன்று தாசில்தார்களுக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் அவர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிகாரிகள் போலீசார் முழுக்கமுழுக்க வரம்பு மீறி செயல்பட்டிருப்பதாக நீதிபதி அருணா ஜெகதீசன் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் தாசில்தார்கள் மூவரும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகார வரம்பில் இருந்து இடம்பெயர்ந்து உள்ளனர் என்றும் அருணா ஜெகதீசன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Latest Videos

undefined

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. அதில் போலீசார் வரம்பு மீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது, அந்த அறிக்கை நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கலானது. 

அதில், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னரே போராட்டக்காரர்களை எச்சரிக்க பயன்படுத்தும் மெகாபோன் மூலமாக என்ன விதமான எச்சரிக்கையும் போலீசாரால் செய்யப்படவில்லை, இது எதுவுமே இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் தாசில்தார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாகவும்,  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட்.. எடப்பாடி சொன்னது பொய்.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்பம்

இந்நிலையில்தான் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எந்தவித உயர் அதிகாரிகளின் அனுமதி இனிறி தாங்களாகவே அனுமதி வழங்கிய தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தன்று பாத்திமா நகர், லைன்ஸ் நகர்,  திரேஸ்புரம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.வி.ஏ பள்ளி மைதானத்திற்கு கோட்ட கலால் அலுவலர் சந்திரனும்,  மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் மற்றும்  மடத்தூருக்கு மண்டல துணை தாசில்தார் கண்ணனும் நியமிக்கப்பட்டனர்.

சப் கலெக்டரின் உத்தரவின்படி அங்கு அவர்கள் பணியமர்த்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜ்குமார் தங்க சீலனும் அதில் அடங்குவார், ஆனால் அவர் இப்போது உயிருடன் இல்லை இறந்துவிட்டார். தங்கசீலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொறுப்பாளராக இருந்தார்.

அவர்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு வழங்கியதாக சேகர் என்பவர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதனடிப்படையில் தங்க சீலனின் தொலைபேசி அழைப்பு,  துப்பாக்கிச்சூடு தொடங்கும்வரை அவர் அப்பகுதியில் இருந்ததை உறுதி செய்துள்ளது. அவர் அப்போது மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட எழுத்தாளர்களுக்கு தகவல் கொடுத்துக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படியுங்கள்:  தூத்துக்குடி துப்பாக்கி சூடு..! கொலை வழக்கு பதிவு செய்து இபிஎஸ்யை கைது செய்ய வேண்டும்..! - எதிர்கட்சிகள்

இதேபோல் உயர் அதிகாரிகளின் உத்தரவு ஏதுமின்றி  மடத்தூர் இலிருந்து  திரேஸ்புரத்துக்கு கண்ணன் சென்றதாகவும்,  அதேபோல்  எஸ்.ஏ.வி பள்ளி மைதானம் திற்கு நியமிக்கப்பட்ட சந்திரன் சிறப்பு நிர்வாக மாஜிஸ்ட்ரேட் உத்தரவு பிறப்பித்ததன்மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறி அவர் அண்ணா நகருக்கு மாற்றப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் சப்-கலெக்டர் மற்றும் தலைமையகத்தின் எந்த உத்தரவுமின்றி தாசில்தார்கள் தங்களது அதிகார வரம்பிற்குட்டபட்ட பகுதிகளில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றியது ஏன் என்பது குறித்தும் அருணா ஜெகதீசன் விளக்கம் கேட்டுள்ளார். இந்நிலையில்தான் தாசில்தார்கள் வரம்பை மீறி துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டனர் என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் மீதும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 17b என் படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தரநிலை துணை ஆட்சியர் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை குறிப்பிட்ட தாசில்தார்கள் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 
 

click me!