பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், அந்த இடத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் அதிகார மோதல்
ஜெயலலிதா மறைவிற்கு அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் இரு தரப்பிற்கும் இந்த தேர்தல் பின்னடைவாக அமைந்தது. இந்தநிலையில் வருகிற 2024 ஆம் ஆண்டு நடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதனையடுத்து அதிமுகவை சமரசம் செய்ய பாஜக தேசிய தலைமை திட்டமிட்டது. ஆனால் சமரச பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார்.
ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இதன் காரணமாக அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என பாஜக தலைமை ஆலோசித்தது. அப்போது பாஜக தலைமையில் ஓபிஎஸ், டிடிவி, தேமுகித, பாமக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஓபிஎஸ் அணியை பாஜக தலைமை அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே பாஜக கூட்டணியில் இணைந்து அதிமுகவை எதிர்க்கலாமா .? என ஓபிஎஸ் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசித்து வருகிறார்.
இதன் அடுத்த கட்டமாக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.