தமிழகத்தில் இருந்து வரி மூலம் மத்திய அரசுக்கு 2 லட்சம் கோடி அளவிற்கு நிதி அளித்த நிலையில், தமிழகத்திற்கு ஒன்றும் கொடுக்கவில்லையென்பதை கிண்டல் செய்து திமுக சார்பாக தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு
நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்க நெருங்க ஆளுங்கட்சி எதிர்கட்சியையும், எதிர்கட்சி ஆளுங்கட்சியையும் விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு உரிய நிதி வழங்கவில்லையென்ற குற்றச்சாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது என்றும், இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
அல்வா கொடுத்து போராட்டம்
மேலும் மாநிலங்களின் கொள்கை முன்னுரிமைகளின்படி வளங்களைத் திரட்டுவதற்கும் முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் உள்ள திறனை முடக்குவதையே மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் திமுகவும் கலந்து கொண்டது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தையும் திமுக தொடங்கியது.
போஸ்டர் ஒட்டிய திமுக
அப்போது வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லையென்றும், ஜி.எஸ்.டி வரி மூலம் கிடைக்கும் வருவாயையும் மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கவில்லையென்ற குற்றச்சாட்டை தெரிவித்தது. இந்தநிலையில் அடுத்ததாக தமிழகம் முழுவதும் திமுக சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு கொடுத்தது 2,56,623 கோடி ரூபாய் ஆனால் நமக்கு கிடைத்து அல்வா என அச்சடிக்கப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்