“மக்களிடம் உண்மையாக இருங்க.. 8 வழிச்சாலை சரியான திட்டம் தான் !” முதல்வருக்கு அறிவுரை கூறிய அண்ணாமலை!

By Raghupati RFirst Published Aug 27, 2022, 8:21 PM IST
Highlights

காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு நிலங்கள் கையகப்படுத்தும்போது பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளத்தூர், மடப்புரம், நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம், அக்கம்மாபுரம் உட்பட பல கிராமங்களில் இருந்தும் நிலங்கள் எடுக்கப்பட உள்ளன.

இந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பலர் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். மேலும் பலர் கால்நடை வளர்ப்பவர்கள். நிலங்களை கையகப்படுத்தும்போது விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டி இருக்கும். மேலும் மேய்கால் புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்பட இருப்பதால் கால்நடைகளும் அதனை வளர்ப்போரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என்ற கருத்து எழுந்துள்ளது.

தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று நமது மாநிலம் போற்றப்பட்ட காலங்கள் போய் வந்தாரை விரட்டும் தமிழ்நாடு என்று ஆனதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெரும் பங்குள்ளது . அரசியல் உள்நோக்கங்கள் பல கொண்ட போராட்டங்களை ஊக்குவித்து தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு வரக் காரணமாக இருந்த திமுக இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து போராடுபவர்களை வசைபாடுவதைத் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் . 

மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”

ஒரு தவறான முன்னுதாரணமாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்யாமல் மக்களின் ஒரே குறையாக மாறியிருப்பதில் ஆச்சரியம் இல்லை . முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பெருநகரங்களை இணைக்கத் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்பட்டது . அதே போன்று ஒரு திட்டம் தான் சென்னை சேலம் நகரை இணைக்கும் 8 வழிச் சாலை திட்டம் . 2000 ஆம் ஆண்டு தமிழகத்தில் சாலை விரிவாக்கம் நடந்த போது அதை மக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து அந்த திட்டத்தை வரவேற்றார்கள் . 

அதே மக்கள் இன்று தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் அதற்கு திமுக சமுதாயத்தில் வளர்த்துவிட்ட விஷச்செடிகளே காரணம் . நமது பயண நேரத்தை குறைப்பது மட்டுமே இந்த 8 வழிச்சாலையின் நோக்கம் அல்ல தமிழகத்தின் 5 தொழில் நகரங்களை இணைக்கும் டிபென்ஸ் காரிடார் திட்டத்தின் முக்கியப்புள்ளி சேலம் நகரம் ஆனால் சென்னை சேலம் இடையே உள்ள சாலை டிபென்ஸ் காரிடாருக்கான அளவில் இல்லாமல் குறுகிய சாலையாக இருப்பதாலே அதை விரிவிக்க திட்டமிட்டார்கள். 

ஆனால் அன்றைய எதிர்க்கட்சியான திமுக தமிழக நலனுக்கு மட்டும் அல்லாமல் தேசிய நலனுக்கு எதிராக செயல்பட்டனர் . இவர்களின் பக்கவாத்தியமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத பொல்லாத பொய்களைச் சொல்லி மக்களை திசை திருப்பினார்கள். திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் 8 வழிச்சாலை திட்டம் 8 விவசாயிகளுக்கு பாதகமான திட்டம் என்றார் , இன்று அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் பச்சை துண்டு போட்டவன் எல்லாம் விவசாயி இல்ல என்று போராடுபவர்களையும் விவசாய பெருங்குடி மக்களையும் கொச்சைப் படுத்திவிட்டார் . எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒருவித நிலைப்பாடு. 

ஆளும் கட்சியாக இருக்கும் போது அதற்கு நேரெதிரான நிலைப்பாடுகளை எடுத்து மக்களைக் குழப்பத்தில் தள்ளியுள்ளது திமுக. இப்போது 8 வழிச் சாலை சரியான திட்டம் என்று திமுக தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்கள் உணர்ந்துள்ளதால் இதுவரை மக்களிடம் அவிழ்த்துவிட்ட பொய்களுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் மேலும் அமைச்சர் எவ வேலு அவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்வதன் மூலமாக திமுக தலைவரின் அறிக்கையை அவரது கட்சிக்காரரே படிப்பதில்லை என்பது நிரூபணமாகிறது. 

மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!

ஜனவரி 2016 ஆம் ஆண்டு திரு முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் சென்னையில் ஒரு புதிய பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் . 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் பரந்தூர் அல்லது மாமண்டூரில் புதிய விமான நிலையம் கட்டுவதற்குத் தேர்வாகியுள்ள இடங்கள் என்று மாநில அரசு குறிப்பிட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின், மாமண்டூரை நீக்கி விட்டு . திருப்போரூர், பரந்தூர், படலம் மற்றும் பண்ணுர் ஆகிய நான்கு இடங்களை புதிய விமான நிலையத்துக்கு தேர்வு செய்து அனுப்பினார்கள் . 

பிறகு மாநில அரசின் பரிந்துரையின் படி பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு தேர்வு செய்யப்பட்டது . திமுக ஆட்சியின் கடந்த ஓர் ஆண்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மாற்று குடியிருப்புகள் கொடுப்பதற்கு முன்பு வீடுகள் இடிக்கப்பட்டதை பரந்தூர் வாசிகள் பார்த்திருப்பார்கள் . அதனால் தான் இன்று திமுக அரசு நிலத்தை வழங்குகிறோம் இழப்பீடு கொடுக்கப்படும் என கூறும் வாக்குறுதிகள் எவற்றையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த திமுக அரசு பரந்தூர் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றும் என்று அந்த மக்கள் எப்படி நம்புவார்கள் ?

அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உடனடியாக திமுக அரசு வழங்க வேண்டும் . அவர்களுக்குச் சரியான குடியிருப்பு பகுதிகளை அமைத்துக் கொடுத்துவிட்டு அவர்களிடம் புது விமான நிலையத்துக்கு நிலங்கள் வழங்க ஒப்புதல் கேளுங்கள் . 2006 ஆம் ஆண்டு திமுக கொடுத்த 2 ஏக்கர் நிலம் வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது . திமுகவின் அந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதியை பரந்தூர் மக்களுக்காவது நிறைவேற்றலாமே ?  

தமிழகத்தில் குறைந்து வரும் முதலீடுகளைக் கண்ட பிறகாவது இனியும் அரசியல் லாபத்திற்காக மக்களைத் திசை திருப்பாமல் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. மேலும் , திருவாரூர் மாவட்டத்தில் ONGC நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருவதை தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுளோம்’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!