
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வருமானத்தை விட 73% அதிக சொத்து என லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்திருந்த மனுவில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததால் ராஜேந்திர பாலாஜி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக மாறுபட்ட கருத்தை தெரிவித்ததால் மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமனம் செய்யப்பட்டார். அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 10 சதவீதத்திற்கும் குறைவாகவே சொத்து சேர்த்து வைத்தால் அந்த வழக்கை கைவிட காவல்துறை முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.