69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதகமும் வராமல் பாதுகாக்க வேண்டும்... எஸ்.டி.பி.ஐ., வலியுறுத்தல்..!

By Thiraviaraj RMFirst Published Feb 4, 2021, 2:33 PM IST
Highlights

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு அரசு வேலைகளில் போதிய பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வது ஒவ்வொரு அரசின் கட்டாயக் கடமையாகும். அதற்காக அரசுகள் இடஒதுக்கீடு முறையை பின்பற்றி வருகின்றன.

69% இடஒதுக்கீடுக்கு இடைக்கால தடைக்கோரும் வழக்கு குறித்து தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக, இடஒதுக்கீட்டின் சட்டப்பாதுகாப்பை காத்திடும் துரித நடவடிக்கை தேவை என தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தி உள்ளது. 

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்ட ரீதியாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், தமிழக அரசு பதிலளிக்கும்படி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்று மண்டல் வழக்கில் 19.11.1992 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க, தமிழக சட்டப்பேரவையில் 31.12.1993 அன்று மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 31-8 - ன் கீழ் பாதுகாப்பு பெறும் பொருட்டு 1994 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் ( 76 - வது திருத்தம் ) சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9 - வது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் 69% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காக பெரும்படையே சதி செய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 69 சதவீத இடஒதுக்கீடு முறைக்கு, இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று, தமிழகத்தைச் சேர்ந்த, சி.வி.காயத்திரி என்பவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு தொடர்பாக, இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு அரசு வேலைகளில் போதிய பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வது ஒவ்வொரு அரசின் கட்டாயக் கடமையாகும். அதற்காக அரசுகள் இடஒதுக்கீடு முறையை பின்பற்றி வருகின்றன. தமிழகம் அதற்கு முன்னோடியாக இருந்து வருகின்றது. இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9 - வது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு சட்டத்தை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்த நினைப்பது துரதிஷ்டவசமாகும்.

ஆகவே, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் வகையில், அலட்சியம் காட்டாமல், தமிழக அரசு தேவையான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு, 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதகமும் இல்லாமல் அதனை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்’’என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

click me!