
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சுய விவரங்களை தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு மற்றும் அறப்போர் இயக்கம் ஆகியவை அறிக்கையாக வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் வேட்பாளர்களின் மொத்த சொத்து மதிப்பு, கடன் பாக்கி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், வோட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். அதிமுக வேட்பாளர்
மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் ஆகியோர் ஆர்.கே.நகரில் கடும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு, அறப்போர் இயக்கம் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகியவை ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் சுய விவரங்களை ஆராய்ந்து அறிக்கையாக வெளியிட்டுள்ளன.
ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்களில் 4 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் அறிவித்துள்ளனர். 7 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்றும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. போட்டியிட்டுள்ள வேட்பாளர்களின் மொத்த சொத்து மதிப்பு 82.81 லட்சம் ரூபாய் என்றும் அதில்
வெளியிடப்பட்டுள்ளது.
அதிகபட்ச சொத்துக்களை உடைய வேட்பாளர்களாக நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் ரூ.16.03 கோடி என்றும், டிடிவி தினகரன் 11.19 கோடி என்றும், அதிமுக சார்பில் போட்டியிடும் மதுசூதனனின் சொத்துக்கள் ரூ.5.19 கோடி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக கடன்களைக் கொண்ட
வேட்பாளர்களையும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது. கலைக்கோட்டுதயத்தின் மொத்த கடன் ரூ.65.22 லட்சம் என்றும், டி.சுரேஷ் மொத்த கடன் ரூ.75.65 லட்சம் என்றும், டிடிவி தினகரனின் மொத்த கடன் ரூ.5.54 லட்சம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 59 வேட்பாளர்களில் 44 பேர் அதாவது 75
சதவிகிதத்தினர் வருமான வரி விவரங்களை அளிவிக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வேட்பாளர்களின் கல்வி தகுதிகளும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 59 வேட்பாளர்களின் 28 பேரின் கல்வித் தகுதி 5 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இடையில் இருக்கிறது. 28 வேட்பாளர்கள் பட்டதாரி அல்லது அதற்குமேல் கல்வி தகுதி உடையவர்களாக அறிவித்திருக்கிறார்கள். 1
வேட்பாளர் தன்னை படித்தவராகவும், மற்றொரு வேட்பாளர் தன்னை கல்வியறிவில்லாதவராகவும் அறிவித்துள்ளனர். மற்றொரு வேட்பாளர் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் பாட நெறியாக தனது கல்வித் தகுதியை அறிவித்துள்ளார். 59 வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே
போட்டியிடுகிறார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.