
ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவ மக்களை காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ஓகி புயலால் குமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஓகி புயலில் சிக்கிய குமரி மாவட்ட மீனவர்களில் 3262 பேர் மீட்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இன்னும் 400க்கும் அதிகமான மீனவர்களை தேடும் பணி நடைபெற்றுவருகிறது.
ஆனால், மீனவர்களை தேடும் பணியில் அரசு மந்தமாக செயல்பட்டதாகவும் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை முறையாக விடுக்கப்படவில்லை எனவும் குமரி மாவட்ட மீனவ மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். அதுமட்டுமல்லாமல், காணாமல் போன மீனவர்களை விரைவில் மீட்க வலியுறுத்தி சாலை மறியல், பேரணி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
ஓகி புயலால், ரப்பர் மரங்கள், வாழை மரங்கள் ஆகியவை சாய்ந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான நெற் பயிர்களும் சேதமடைந்துள்ளன. குமரி மாவட்ட மீனவ மக்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
மீனவர்களின் கடும் போராட்டத்திற்குப் பிறகு குமரி மாவட்டத்திற்கு சென்று மீனவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி குமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியில் மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார். மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களையும் ராகுல் பெற்றார். மக்களின் கோரிக்கைகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், ராகுல் காந்தியிடம் மொழிபெயர்த்தார்.
ராகுல் காந்தியுடன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விஜயதாரணி, கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.