
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிகாரிகளின் அலப்பறைகள் அதிகமாகிக் கொண்டே போவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொகுதியில் பணப்பட்டுவாடா பரவலாக நடப்பதாக, தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த பார்வையாளர்களே யாரேனும் ஓரிருவர் கண்டுபிடித்து சுற்றி வளைத்தால் கூட, அவர்களை தொகுதி மக்களின் துணை கொண்டே, முற்றுகையிட்டு துரத்தி விடுகிறார்கள்.
தேர்தல் பறக்கும் படையினருக்கு உதவிகரமாக இருப்பதற்காக, மத்திய துணை ராணுவப் படையினர் அமர்த்தப் பட்டுள்ளனர். அவர்கள், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பாக உடன் செல்கின்றனர்.
இரு தினங்களுக்கு முன்னர் ஒரு முட்டுச் சந்தில் வைத்து, சிலர் பணப் பட்டுவாடா செய்து வந்துள்ளனர். அவரை அங்கே வந்த தேர்தல் பார்வையாளர் ஒருவரும் உடன் வந்த துணை ராணுவப் படை வீரரும் நெருங்கி, கையோடு பிடித்தனர். ஆனால் அதற்குள் சுற்றியிருந்த பெண்கள் சிலர், அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டு, சம்பந்தப் பட்ட நபரை தப்பிக்க வைத்தனர். தனியாக மாட்டிக் கொண்ட அதிகாரியும் பாதுகாப்பு வீரரும் திண்டாடித்தான் போனார்காள். அந்தப் பெண்களை மீறி பாதுகாப்பு வீரரால் குறிப்பிட்ட நபரைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இந்நிலையில், அந்த அதிகாரி மற்றும் பாதுகாப்பு வீரர் மீது, தங்கள் கைகளைப் பிடித்து இழுத்ததாகவும், முறைகேடாக நடந்து கொண்டதாகவும் பெண்கள் புகார் சொல்லத் தொடங்க, இதென்ன வம்பு என்று இருவரும் அப்படியே தப்பித்து வெளியே வந்தனர்.
புதன்கிழமை நேற்று ஒரு கல்யாண மண்டபத்தில் பண விநியோகம் நடப்பதாக செய்தி வந்ததை அடுத்து அங்கே விரைந்துள்ளனர் தேர்தல் பார்வையாளர்கள். ஆனால், அவர்களை உள்ளேயே விடாமல் மண்டபத்தின் கதவுகளைப் பூட்டி, உள்ளே ஜரூராக வேலையைத் தொடர்ந்துள்ளனர்.
இப்படி பண விநியோகத்தைத்தான் தடுக்க முடியவில்லை என்றாலும், எப்படி பணம் வருகிறதோ அந்த வழிகளையாவது தடுக்கலாமே என்றுதான் வாகனச் சோதனை, தணிக்கை எல்லாம் செய்கிறார்கள். இதற்காக, துணை ராணுவ வீரர்கள் துடிப்புடன் களத்தில் இறங்கினால், பறக்கும் படை அதிகாரிகளோ கண்டும் காணாமல் அனைத்தையும் விட்டு விடுகிறார்கள். காரணம், இப்படி எல்லாம் செய்துவிட்டு, இவர்கள் எல்லாம் இங்கேதானே வேலை செய்யப் போகிறார்கள் என்று ஏற்கெனவே தினகரன் மிரட்டியதைப் போல், ஆளும் தரப்பும் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. எனவே, தங்கள் வேலையை, சொந்த வாழ்க்கையை காத்துக் கொள்ள பறக்கும்படை அதிகாரிகளும் வெறுமனே விட்டு விடுகிறார்களாம். இதனால் விரக்தி அடைந்துள்ளது என்னவோ, துணை ராணுவ வீரர்கள்தான்!
வாக்காளர்களுக்கு பண விநியோகம், பரிசுப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்காகத்தான், தொகுதியில் உள்ள முக்கிய சந்திப்புகளில் தேர்தல் ஆணையம் தற்போது சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளது. ஒவ்வொரு சாவடியிலும் மாநகராட்சி அதிகாரி, இரண்டு அல்லது மூன்று துணை ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீசார் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் நிறுத்தப் பட்டுள்ளனர். அவர்கள், அந்த சோதனைச் சாவடியைக் கடக்கும் கார்,வேன் உள்ளிட்ட வாகங்களை மறித்து சோதனை செய்கிறார்கள்.
வழக்கமாக வரும் வாகனங்களையேகூட சோதனை செய்ய வேண்டும் எனும் போது, அரசியல் சார்புடைய அல்லது கட்சிக்காரர்களின் வாகனங்களை நிறுத்தி, தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அவற்றை பறக்கும் படை அதிகாரிகளோ, ஒப்புக்கு சோதனை செய்து விட்டு விடுகிறார்கள். அதுவே திமுக, அதிமுக., என இருந்தால், அமைச்சர்கள், இந்நாள் முன்னாள் எம்பி.,க்கள் என இருந்திருந்தால், அவர்களை கீழே இறக்கி வைத்துவிட்டு, அவர்களது வாகனங்களை அவசியம் தீவிரமாக சோதனை இட வேண்டும். ஆனால், அப்படி எல்லாம் பறக்கும் படையினர் செயவதில்லை.
தி.மு.க., - அ.தி.மு.க., வட்ட மாவட்ட செயலர்கள் வந்தால் கூட, அவற்றை அப்படியே விட்டு விடுகின்றனர். ஆனால், கடமைக்கு அந்த வாகனங்களின் எண்ணை மட்டும் குறித்து கொண்டு தொகுதிக்குள் அனுப்புகிறார்கள். பறக்கும் படையில் இடம்பெற்றுள்ள மாநகாரட்சி அதிகாரிகளும் உள்ளூர் போலீசாரும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை சரியாக சோதனை செய்வதில்லை. அப்படி என்றால், முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வந்தால் சோதனை செய்வது நடித்து, ஏன் அவர்களின் எண்ணைக் குறித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டால், 'மத்திய படையினருக்கு தெரிவிப்பதற்காகத் தான் சோதனை செய்து எண்களைக் குறித்துக் கொண்டு காட்டுகிறோம்' என்று யாரிடம் சோதனை செய்கிறார்களோ அவர்களிடமே கூறுகின்றனராம்.
இதனால், சென்ற முறை நிகழ்ந்தது போல் மீண்டும் ஒரு முறைகேடு ஆர்.கே.நகரில் நடப்பதாகவும், தேர்தல் பார்வையாளர்களுக்குத் தெரிந்தே பண விநியோகம் நடப்பதால், தேர்தல் நடப்பது குறித்து தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும் என்றும், பண விநியோகம் செய்ய முடியாத கட்சியும், சுயேச்சைகளும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.