
சென்னை கொளத்தூரில் நகைக்கடையை கொள்ளையடித்த ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராம், ராஜஸ்தானில் கைது செய்த தனது தந்தை மற்றும் உறவினர்களை விடுவிக்காவிட்டால், போலீசாரின் குடும்பத்தையும் கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளான்.
சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள மஹாலட்சுமி நகைக்கடையில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில், ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக தமிழக போலீஸ் தனிப்படை ராஜஸ்தான் விரைந்தது.
மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் முதல்நிலை காவலர்கள், தலைமை காவலர்கள் ஆகியோர் அடங்கிய குழு ராஜஸ்தான் சென்றது.
கொள்ளையடித்த கும்பலின் தலைவனான நாதுராம் மற்றும் மற்றும் மற்ற கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் நாதுராமால் பெரியபாண்டியன் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த பெரிய பாண்டியனின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், உள்துறை செயலாளர், முன்னாள் மற்றும் தற்போதைய காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முதல்வர் உட்பட அனைவரும் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு பெரிய பாண்டியனின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. வீரமரணம் அடைந்த பெரிய பாண்டியனின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.
இதையடுத்து பெரியபாண்டியனின் உடல், சென்னையிலிருந்து அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சாலைப்புதூர் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.